×

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ஊர் திரும்பினர்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று காலை 4 மணியளவில் ராமேஸ்வரம் வந்தது. அதை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதனுடன் கடலில் இருந்து மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ஊர் வந்தனர். கடலில் மாயமான ஒரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 31ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகை, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி, கடலில் மூழ்கடித்தது. விசைப்படகில் இருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதில், மலைச்சாமி என்ற மீனவரை உயிரிழந்த நிலையிலும், மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய இரு மீனவர்களை உயிருடனும் இலங்கை கடற்படை மீட்டது. கடலில் மாயமான ராமச்சந்திரன் என்ற மீனவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மீனவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவரவும், சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக இலங்கை தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சிறைபிடித்த மீனவர்கள் வழக்கின்றி விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், உயிரிழந்த மலைச்சாமியின் உடல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஊர்காவல்துறை போலீசாரிடம் இருந்த 2 மீனவர்கள், மலைச்சாமியின் உடல் இந்திய தூதரக அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து நேற்று இரவு மீனவர்கள் இரண்டு பேருடன் மலைச்சாமியின் உடல், இலங்கை கடற்படை கப்பல் மூலம், இந்திய கடல் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய கடற்படை அதிகாரிகள் கடல் எல்லையில் முறையாக பெற்றுக்கொண்டு, அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனர். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் மாந்தோப்பில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினரிடம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, வட்டாட்சியர் செல்லப்பா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி ஆகியோரை இந்திய கடற்படை அதிகாரிகள் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்படை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இவர்களிடம் மீன்வளத்துறையினர், மரைன் போலீசார், ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மீனவர் மூக்கையா கூறுகையில், ‘இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை ரோந்து படகு எங்களின் படகில் முட்டி மோதி மூழ்கடித்தது. மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மூழ்கிய தத்தளித்தோம். இருவரை முதலில் மீட்டனர். அடுத்து மீட்கப்பட்ட மீனவர் மலைச்சாமி தாக்குதலால் அதிர்ச்சியில் இறந்துவிட்டார். இலங்கை கடற்படை எங்களை ரோந்து படகில் ஏற்றிக் கொண்டு மாயமான மீனவர் ராமச்சந்திரனை பல மணிநேரம் தேடியது. அவர் கிடைக்காததால், எங்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்…
இந்நிலையில், ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், மாயமான ராமச்சந்திரனை மீட்ககோரி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். இதனால், ராமேஸ்வரம் மீன்பிடித்து துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாயமான மீனவர் ராமச்சந்திரன் குறித்து எதுவும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர்.

The post இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ஊர் திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameswaram ,Malachami ,Sri Lankan Navy ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை...