×

கோவையில் 2ம் நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

 

கோவை, ஆக.3: இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் ‘‘அக்னிபாத்’’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த முகாம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2ம் நாளாக நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதில், அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். அதன்படி, நேற்று வந்தவர்கள் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடற்தகுதி உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது. தினமும் ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post கோவையில் 2ம் நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Union Government ,Indian Army ,Coimbatore Nehru Sports Arena ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...