வேலூர், ஆக.3: வேலூரில் கார்களின் கண்ணாடியை உடைத்து செல்போன், பணத்தை திருடிய டிப்டாப் கும்பலை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றின் கார் பார்க்கிங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து இரண்டு செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், டிப் டாப் உடை அணிந்து வலம் வரும் ஆசாமிகள் செல்போன் பேசுவது போலவும், காரின் உரிமையாளர்களை போலவும் அங்கும் இங்கும் உலாவி கார்களை நோட்டமிட்டு மிக லாபகமாக கார்களின் கண்ணாடியை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், காரை உடைத்து திருடும் டிப்டாப் ஆசாமி கும்பல் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த யாதவ், பிரதாப் உட்பட மூன்று பேர் என்றும் இவர்கள் மீது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும். கார்களின் கண்ணாடியை லாவகமாக உடைத்து திருடுவது இவர்களது பாணியாக உள்ளது. தலை மறைவாக உள்ள அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
The post செல்போன் பணத்தை திருடிய டிப்டாப் கும்பல் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை வேலூரில் கார்களின் கண்ணாடியை உடைத்து appeared first on Dinakaran.