×

அஜினோமோட்டோ எனும் அரக்கன்!

நன்றி குங்குமம் தோழி

சை னீஸ் வகை உணவுகளில்தான் அஜினோமோட்டோ தூவுவார்கள் என்கிற மாயை மறைந்து தமிழகத்தில் தயாராகும் ரசம் வரை அஜினோமோட்டோவை தூவ ஆரம்பித்துவிட்டார்கள் நம் மக்கள். இன்றைய அவசர உலகில், சமையல் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் அஜினோமோட்டோ எனும் உப்பை பயன்படுத்தாத நாடுகளே இல்லை. சாலையோர கடைகளில் தொடங்கி மல்டி குஷன் ரெஸ்டாரன்ட் வரை… சென்னை முதல் நியூயார்க் வரை… எல்லா உணவகங்களிலும் ருசியினைக் கூட்ட இந்த சுவையூட்டி உப்பை பயன்படுத்தாத உணவகங்களே இல்லை எனலாம்.

அஜினோமோட்டோ என்கிற சுவையூட்டி எப்படி ஒரு உணவில் சுவையை கூட்டுகிறது? உடலுக்கு இது உண்மையிலேயே தீங்கு ஏற்படுத்துகிறதா? விரிவாகப் பார்ப்போம். பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோவை லேசாக உணவில் தூவிவிட்டாலே சுவையில்லாத உணவும் ருசிக்கும் என்றே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மருத்துவ உலகம் இதனை Slow killer என்கிறது.

நாம் நினைப்பது போல, அஜினோமோட்டோ என்பது கடல் உப்பின் பெயரல்ல. 1917ல் ஜப்பானில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயர். அதன் உற்பத்தி பொருளான உப்பிற்கு அந்த நிறுவனத்தின் பெயரே ஒட்டிக்கொண்டது. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate(MSG) என்பதாகும். கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி( Seaweed) வகைகளில் இருந்து எடுக்கப்படுகிற ஒரு வகையான உப்பு இது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிவோவை தலைமையிடமாகக் கொண்டு கிகுனே இகெடா என்பவரால் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. முதலில் தனது வீட்டில் நடத்திவந்த வைத்தியசாலையில், கிகுனே இகெடா இந்த உப்பை மருந்தாகப் பயன்படுத்தி வந்தார்.

பிறகு உணவுகளில் சேர்த்ததும் ருசி அதிகரிப்பதை அறிந்தவர், இதனைப் பயன்படுத்தி Seasoning, Cooking oil, Sweetener, Amino acids வரை தயாரித்ததுடன், மருத்துவத் துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்து வைத்தார்.இந்த உப்பு தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ முதலில் உயர்தரமானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் 1917ல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்த பிறகு, Glutamate என்கிற செயற்கை அமிலத்தை Monosodium உப்புடன் கலந்து, வியாபார நோக்கில் விற்பனையை அதிகப்படுத்தி இருக்கின்றனர். Glutamate என்பது ஒரு முறை உண்டாலே, மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி.

Glutamate பயன்படுத்தி Artificial Sweetener என்னும் Aspartame உணவை முதலில் தயாரித்தனர். இதன் அபாயம் உணர்ந்த அமெரிக்கா பிறகு இதனை தடை செய்தது. ஆனால் இதன் மறு உருவாக்கமே இந்த அஜினோமோட்டோ உப்பு. சரி, இதை நாம் பயன்படுத்த வேண்டாம் என நினைத்து தவிர்த்தாலும், நாம் உபயோகிக்கும் அத்தனை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும் மறைமுகமாக இது கலக்கப்பட்டுள்ளது. நாம் விரும்பி உண்ணாமலே நமது நாவை இதன் சுவைக்கு அடிமைப்படுத்துகிறது.

குறிப்பாக குழந்தைகள் உண்ணும் நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், பாக்கெட் சிப்ஸ், சாதாரண பிஸ்கெட், கிரீம் பிஸ்கெட், டின்னில் வரும் மீன், சிக்கன், ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா, பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza, Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாவற்றிலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer கலந்தே இருக்கிறது. இதனால்தான் Lays, Kurkure வகையறா கரகர மொறுமொறு உணவுப் பொருட்களை உண்ணுகிற நமது குழந்தைகள் நான் உனக்கே உனக்கா என அதற்கு அப்படியே அடிமையாகி போகிறார்கள்.

அஜினோமோட்டோவை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்…

* இரு பாலருக்குமே முடி கொட்டுவது உறுதி.

* ஐந்து வயதுக் குழந்தைகளுக்கே தீராத தலைவலியை உருவாக்கும்.

* Glutamate ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமாக பசி எடுக்கும்.

* குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது விஷமாக மாறுகிறது.

* முதலில் அதீத உற்சாகத்தை நரம்பு மண்டலத்தில் உருவாக்கி, பிறகு அதீத பலஹீனத்தையும் ஏற்படுத்தும். இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nervous System என்கிறார்கள்.

* தைராய்டு, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, அதீத வியர்வையால் உருவாகும் நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration), கண்களில் தோன்றும் ரெட்டினா பிரச்னை போன்றவற்றுக்கும் இந்த உப்பு காரணமாக இருக்கிறது.

*தொடர்ந்து இதை நாம் உணவாக எடுத்தால் புற்றுநோய் உருவாகவும் வழிவகுக்கலாம்.

தொகுப்பு: மணிமகள்

The post அஜினோமோட்டோ எனும் அரக்கன்! appeared first on Dinakaran.

Tags : Ajinomoto ,Kumkum Doshi ,Tamil Nadu ,
× RELATED வாஷிங்மெஷின் பராமரிப்பு