×

தொழில் நுட்ப வளர்ச்சிக்குள் கட்டுண்டு கிடக்கும் இளைஞர்களால் குறைந்து வரும் நட்பு பாராட்டுதல்: உளவியலாளர்கள் ஆதங்கம்

‘‘காலம் கடந்த நிலையில் ஒரு மனிதன் தனது வாழ்க்ைக பயணத்தின் சுவடுகளை அசைபோடுகிறான். அப்போது அவனது மனதில் முந்தி நிற்பது தென்றலாய் இதயத்தை வருடிய இனிய நட்பின் நினைவுகளே’’ என்பது பிரபல கவிஞர் ஒருவரின் கூற்று. உண்மையான நட்பு என்பது கறந்த பாலினும் தூய்மையானது. காட்டாற்று வெள்ளம் போன்றது. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்தும் பிரவாகம் எடுத்து உள்ளங்களை இணைக்கும் உணர்வுப்பூர்வமானது. இப்படிப்பட்ட ஒப்பற்ற நட்பை மனிதகுலம் போற்றிக்காத்து பாராட்ட வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இதை எடுத்துச் செல்லவேண்டும். இதை உணர்த்தும் வகையில் உலகநாடுகள் அனைத்தும் சர்வதேச நட்பு தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த கொண்டாட்டம் என்பது நாடுகள் ேதாறும் மாறுபடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆகஸ்ட் (நடப்பு) மாதத்தின் முதல் வாரத்தில் சர்வதேச நட்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்றைய வாழ்க்கை சூழலில் உலகளாவிய நட்பு பாராட்டுதல் குறித்த பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து உளவியல் சார்ந்த மூத்த நிபுணர்கள் கூறியதாவது: உண்மையான நட்பு என்பது காலம், தூரம் மற்றும் சூழ்நிலைகளை கடந்தது. எந்த பாசாங்குகளுக்கும் இல்லாதது. அது கீழே இருக்கும் நண்பர்களை மேலே உயர்த்தும். நமது வெற்றிகளை கொண்டாடும். சோதனைகளும், இன்னல்களும் நம்மை தாக்கும் போது அசைக்க முடியாத ஆதரவை வழங்கும். அதேபோல் உண்மை நட்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நம்பிக்கை. நண்பர்கள் தங்களுக்குள் இருக்கும் ரகசியங்களை பாதுகாத்து, ஒருவருக்கொருவர் நம்பிக்ைக கொள்கின்றனர். இந்த நம்பிக்கை தான் நிலைத்து நீடித்து வளரும் நட்புக்கான அடித்தளம். கணவன், மனைவி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி போன்றவர்களுக்கு தெரியாத அல்லது தெரிவிக்க இயலாத நிகழ்வுகளை கூட நெருங்கிய நண்பர்களிடம் தெரிவிப்பதற்கும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கையே காரணம். துன்பம் வரும் நேரத்தில் கடவுளை வேண்டுகிறோம். அதற்கடுத்து உதவி தேவைப்பட்டால் பெரும்பாலானவர்கள் முதலில் நாடுவது நல்ல நண்பர்களை மட்டுமே. அதற்கடுத்துதான் நெருங்கிய உறவினர்களை நாடுகிறார்கள் என்பதும் உளவியல் ரீதியான உண்மை. பரஸ்பரம் அன்பு மட்டும் பாராட்டாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வதிலும் முதலிடத்தில் இருப்பது நட்பு என்பதே இதற்கு காரணம்.

எனக்கு இந்த உலகில் நண்பர்கள் என்று யாருமே கிடையாது என்று ஒருவர் அழுத்தமாக கூறினால், கண்டிப்பாக நாம் அவரது மனநலத்தை பரிசோதிக்க வேண்டும். இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் நவீனமயமான இன்றைய வாழ்க்கை சூழலில் நட்பு பாராட்டுதல் என்பது வெகுவாக குறைந்து வருகிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. ‘உள்ளங்கையில் உலகம்’ என்ற தொழில் நுட்ப வளர்ச்சிக்குள் இளைய தலைமுறை கட்டுண்டு கிடப்பதே இதற்கு காரணம். முந்தைய காலகட்டங்களில் மனம் விட்டு பேசுவதற்கான நேரம் அதிகம் இருந்தது. அலுவலகம், வீடு, பள்ளி, கல்லூரி, தொழில் என்று எது முடிந்து திரும்பினாலும் நண்பர்களை சந்திப்பதும், சிலமணி நேரம் பேசி மகிழ்வதும் ஒரு வழக்கமாவே இருந்தது. அனைத்து ஊர்களிலும் சிறிய குழுவாக நண்பர்கள் இணைந்து சுற்றுலா செல்வதும், திருவிழாக்கள் கொண்டாடுவதும் ஒரு திட்டமிட்ட நிகழ்வாக தொடர்ந்தது. ஆனால் இன்றைய இளைஞர்களின் நட்பு செல்போன் மெசேஜ் போன்ற தகவல் பரிமாற்றங்களால் தான் அதிகநேரம் நிகழ்கிறது. இதனால் கடந்த காலங்களை போன்று நட்பின் மீதான பிடிமானங்கள் இப்போது இல்லை என்பதும் மிகையில்லை. இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.

The post தொழில் நுட்ப வளர்ச்சிக்குள் கட்டுண்டு கிடக்கும் இளைஞர்களால் குறைந்து வரும் நட்பு பாராட்டுதல்: உளவியலாளர்கள் ஆதங்கம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்