×

தூத்துக்குடி துறைமுகத்தில் வேகமெடுக்கும் வளர்ச்சி பணிகள்: 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் தரம் உயர்கிறது.! ஆணைய தலைவர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக உருவாக்கப்படும் என்று துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த் குமார் புரோஹித் கூறியுள்ளார். இதுதொடர்பாக வஉசி துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் வருடத்திற்கு 81.05 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறனுடன் தென் தமிழகத்தில், பொது சரக்குகளை கையாளுவதிலும் சரக்கு பெட்டகங்களை கையாளுவதிலும் முன்னணி துறைமுகமாக திகழ்கிறது. 2024-25ம் நிதியாண்டில், ஜூலை 25ம் நாள் வரை வஉசி துறைமுகம் 13.17 மில்லியன் டன்களை கையாண்டு 5.29 சதவிகித வளர்ச்சியும், சரக்கு பெட்டகங்களை பொருத்தவரையில் 2.47 டிஇயுக்களையும் கையாண்டு 4.73 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது. தற்காலிகமாக பொது சரக்குகளை கையாளுவதில் எதிர்கொள்ளும் நெருக்கடி சூழலில் கூட இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு துறைமுகம் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கும், சரக்கு கையாளும் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்கும் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் துறைமுகம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு ஏதுவாக அமையும். துறைமுகம் குறைந்த செலவில் சரக்குகளைக் கையாளுவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வஉசி துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3ஐ ஆழப்படுத்தும் பணி, அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளது. அதே சமயம் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை ஆழப்படுத்தும் பணி மற்றும் கப்பல் திரும்பும் சுற்றுப்பாதையை ஆழப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக தூத்துக்குடி பல்நோக்கு முனையம், தனியார் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் 3ஐ இயந்திரமயமாக்கும் திட்டமானது 18 மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டிற்கள் ஆழப்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் 100-120 டன் திறன் கொண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் பயன்படுத்தி 2 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். சரக்கு பெட்டக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு வசதியாக வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு பெட்டக முனையமான ஜே.எம். பக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி இன்டர்நேஷ்னல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் இயக்க உள்ளது. இந்த சரக்கு பெட்டக முனையமானது 14.20 மீட்டர் ஆழம், 370 மீட்டர் நீளமும் கொண்டமையால் ஆண்டிற்கு 6 லட்சம் டிஇயு சரக்குப்பெட்டகங்களை கையாள முடியும்.

இத்தளத்தின் கட்டமைப்பு பணிகள், தரைதளம் அமைக்கும் பணிகள், கப்பலை கையாளும்போது கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி அமைத்தல் மற்றும் தடுப்பு காப்பு அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு தளங்களை சீரமைத்தல், இயந்திரங்களை இயக்குவதற்கு வசதியாக ரயில் பாதை அமைத்தல் மற்றும் அதன் செயல்பாட்டு பணிகள் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் வஉசி துறைமுகத்தில் கூடுதலாக 2 மில்லியன் டன் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக நங்கூரமிடப்பட்டுள்ள சரக்கு கப்பல்களில் இருந்து சரக்குகளை கையாளுவதற்கு மிதவை இயந்திரங்கள் மற்றும் 3 சுமைப்படகுகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

120 மீட்டர் நீளமும், 52-55 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை கப்பல்களை கையாளுவதற்காக வசதியாக எண்ணை தளம் 2ல் கப்பல் பாதுகாப்பிற்கான ஒரு அமைப்பு அமைக்கும் பணிகள் 2025ம் ஆண்டின் மத்தியில் முடிக்கப்படும். வஉசி துறைமுகத்தில் உரம் மற்றும் உர மூலப்பொருட்கள் சார்ந்த கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலக்கரி தளம் 2ல் உள்ள கன்வேயர் அமைப்பை நீக்குதல் மற்றும் 3 ஹாப்பர் அமைப்பினை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தளத்தின் மிதவை ஆழம் 12.7 மீட்டர் ஆகும். மேலும் கூடுதலாக துறைமுகத்தில் 13 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக நிலக்கரி தளம் 1ல் கன்வேயர் இணைப்பு நிறுவப்பட உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனத்தால் நிலக்கரி தளம் 1 செயல்படாத நேரத்தில் தளத்தினை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு 0.72 மில்லியன் மெட்ரிக் டன் வருடத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கன்வேயர் இணைப்பு கட்டுமான பணியானது அக்டோபரில் முடிக்கப்படும். துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் 2ல் கூடுதலாக ஒரு நாளைக்கு 25,000 டன் சரக்குகளை கையாளக் கூடிய 100 டன் திறன் கொண்ட நகரும் பளு தூக்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. வடக்கு சரக்கு தளம் 2 மற்றும் வடக்கு சரக்கு தளம் 3 ஒவ்வொன்றிலும் கூடுதலான சரக்கு தளப்பகுதி 5000 சதுர மீட்டர் நிலப்பரப்பு உருவாக்கப்படும். இப்பணியானது நவம்பர் 2024ல் முடிக்கப்படும். மேலும் சரக்குதளம் 5 மற்றும் 6ல் காற்றாலை இறகுகளை தடையில்லாமல் கையாளுவதற்கு வசதியாக 2 கிராலர் இயந்திரங்கள் செப்டம்பர் 2024ல் நிறுவப்பட உள்ளது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் இந்தி நிதியாண்டு முடிவில் துறைமுகம் 50 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாள முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post தூத்துக்குடி துறைமுகத்தில் வேகமெடுக்கும் வளர்ச்சி பணிகள்: 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் தரம் உயர்கிறது.! ஆணைய தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin Port ,Thoothukudi ,Port Authority ,Sushant Kumar Purohit ,Tuticorin Vausi Port ,Vausi Port Authority ,Thoothukudi Vausi Port Authority ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...