பேரணாம்பட்டு, ஆக.2: ஆந்திராவில் இருந்து பேரணாம்பட்டிற்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ₹90 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம்- மேல்பட்டி சாலையில் உள்ள குருநாதர் கிராமம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரிய வந்தது. காரில் வந்தவரிடம் விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம், புங்கனூர் பகுதியை சேர்ந்த தரத்(29) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், புகையிலை பொருட்கள் கடத்திய கார், 40 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ₹90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி வழக்கு பதிந்து தரத்தை கைது செய்தார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
The post காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது கார் மற்றும் ₹90 ஆயிரம் பறிமுதல் ஆந்திராவில் இருந்து பேரணாம்பட்டிற்கு appeared first on Dinakaran.