×

டெல்லியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் தாய், மகன் உள்பட 7 பேர் பலி: கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் தாய், மகன் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் ஒரு இடத்தில் கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை டெல்லியில் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நேற்றும் டெல்லியில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரையில் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் சாலை முழுவதும் வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்தனர். வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக டெல்லி நாடாளுமன்ற வழக்கத்திலேயே மழைநீர் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டெல்லி பிரஸ் கிளப்பிற்குள் தண்ணீர் புகுந்ததால் பத்திரிகையாளர்கள் நாற்காலிகளின் மேல் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நேற்று இரவு டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் காஜிபூரில் உள்ள கோடா காலனி அருகே தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் தனுஜா (22) என்ற இளம்பெண் மற்றும் அவரது 3 வயது மகன் பிரியான்ஷ் ஆகியோர் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். சப்ஜி மண்டி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். வசந்த் கஞ்சில் சுவர் இடிந்து விழுந்ததில் மற்றொரு பெண் காயமடைந்தார். தர்யாகஞ்சில் சுவர் இடிந்து விழுந்ததில் பல கார்கள் சேதமடைந்தன. மழைக்கு இதுவரை மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

The post டெல்லியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் தாய், மகன் உள்பட 7 பேர் பலி: கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,NEW DELHI ,India ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்