×

குரு பலன் எப்போது வரும்?

‘‘ஸார்.. என் பையனுக்கு குரு பலனும் இல்லை. நீங்க சொல்ற தசா, புக்தி, அந்தரமும் சரியில்லை. அவன்கூட படிச்ச பையனுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சி. சிலருக்கு குழந்தை பொறந்து செட்டில் ஆகிட்டாங்க. நீங்க எப்போ பார்த்தாலும் நேரங்காலம் வரலேன்னு சொல்றீங்க. எனக்கு ஜோசியத்து மேலயே நம்பிக்கை இல்லாம போயிடுச்சி. அவனே ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு புலம்பறான். ஏதாவது வழி இருக்கான்னு பாருங்களேன்’’ என்றும் விசனத்தோடு பெற்றோர்கள் ஜோதிடர்களிடம் செல்வதுண்டு. ‘‘உங்க ஜாதகம் இருந்தா கொடுங்க’’ என்று அவர்களை திருப்பிக் கேட்பேன். ஆம், பெற்றோரின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு அட்சதை போடக்கூடிய பாக்கியம் உள்ளதா என்று ஆராய்வேன். பெற்றோருக்கு குரு நல்ல இடத்தில் அமர்ந்தால் கூட போதுமே என்று திருமணத்தை நடத்தி முடிக்க வழி சொல்வேன். இன்னும் சில விஷயங்களை நினைவில் நிறுத்துங்கள். வழிபாட்டுத் தலங்களெல்லாம் குரு கொலுவிருக்கும் இடங்களாகும். எனவே, உங்களின் இஷ்ட, குல தெய்வக் கோயிலில் திருமணத்தை வைத்துக் கொள்வதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஏழைப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். பசுவிற்கு பச்சரிசியும், வெல்லமும் கலந்த உணவை கொடுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். தேர்வில் தவறியோரை படிக்க வையுங்கள். கல்வி கட்டணம் செலுத்த முடியாது தவிப்போருக்கு உதவுங்கள். உங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஏதேனும் சங்கடத்திலும், பிரச்னையிலும் சிக்கியிருந்தால் தாமதப்படுத்தாது ஓடி உதவுங்கள். சிதிலமடைந்த கோயிலை நிமிர்த்த முடியுமா என்று யோசியுங்கள். குருதான் ஒளிக்குரிய கிரகமும் கூட எனவே பள்ளிக்கு டியூப்லைட் வாங்கிக் கொடுங்கள். ‘‘ஸார்… நீங்க மேல சொன்ன தகவல்களுக்கும் குரு பலனுக்கு என்ன சம்மந்தம்’’ என்று கேட்கிறீர்களா.

‘‘சம்பந்தம் உண்டு. மேலே சொன்ன அனைத்து இடங்களும், செயல்களும் குருவின் ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள். இவ்வுலகமே கர்மா எனும் செயல், விளைவு எனும் இரு விஷயங்களுக்குட்பட்டது. குரு பலன் என்பது ஒரு செயல். திருமணம் என்பது அதன் விளைவு. சிதில மடைந்த கோயிலை சரி செய்தல் என்பது விளைவு. ஏனெனில் குருவருள் காரணமாக இருந்தால்தான் கோயிற் பணிகளை செய்ய முடியும். நீங்கள் நேரடியாக விளைவை நிகழச் செய்யும்போது குருவருள் எனும் காரணம் தானாக அங்கு பொலிகிறது. குரு பலனை தற்காலிகமாக நீங்கள் பெறுகிறீர்கள். திருமணமும் நடக்கிறது. பரிகாரம் எனும் முழு விஷயத்தின் சூட்சுமமே இந்த விளைவுகளை உருவாக்குவதாகவே இருப்பதை பார்க்கலாம். அந்தந்த கிரகங்களுக்குரிய விஷயங்களில் நீங்கள் கவனத்தை திருப்பும்போது அவர்கள் பார்வையில் நீங்கள் படுகிறீர்கள். இந்த எளிமையான விஷயத்தை புரிந்துகொண்டு செய்தால் பரிகாரங்களில் முழுமையாக ஈடுபடலாம். பரிகாரம் என்பதே செயல் வடிவ பிரார்த்தனைதான் என்பதை மறக்காதீர்கள்’’ ‘‘ஐயா… நான் கிராமத்து விவசாயி. எனக்குத் தெரிந்ததெல்லாம் நிலமும், நீரும்தான். நான் என்ன செய்வது’’‘‘ஒன்றும் கவலைப்படாதீர்களய்யா… உங்கள் நிலத்தில் விளையும் வேர்க்கடலையை முடிந்தவரை சிவாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தி நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுங்கள். பசும்பாலை அபிஷேகத்திற்கு கொடுங்கள் போதும்.

The post குரு பலன் எப்போது வரும்? appeared first on Dinakaran.

Tags : Guru ,Bhukti ,Antaram ,Guru Palan ,
× RELATED பதிபக்தி, குருபக்தி இரண்டில் அதிக பலன் தருவது எது?