×

கண்டறியாதன கண்டேன்

இறைவனை வழிபடுவதற்கும் சித்தர்களை வழிபடுவதற்கும் ஒரு வேற்றுமை உண்டு. இறைவன் அருள்பாலிக்கும் திருக்கோயில்கள் ஆர்ப்பரித்துப் பெய்யும் பெருமழையைப் போன்றவை. ஆனால் சித்தர்கள் அருளும் பீடங்கள் என்பவை அளவாக நீர்தரும் ஆறுகளைப் போன்றவை.நம்மைப் போன்றவர்கள் தாகமெடுத்து நீருக்காகத் திரியும் பசுக்கள் எனக்கொண்டால், பெருமழையைவிட நம் தேவைக்கு அளவாக ஆற்றில் நீர் பருகுவது இயல்பு. அவ்வாறு அருளாற்றலை நம் தேவைக்கேற்ப தந்து தரமுயர்த்தும் சித்தர்களின் பீடங்கள் இறைவழிபாட்டில் இருந்து சற்று வேறுபட்டதுதானே.நினைக்க முக்தி தரும் தலமாகிய திருவண்ணாமலையில் திரும்பும் திசையெங்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளும், ஆசிரமங்களும், அதிர்ஷ்டா னங்களும் நிறைந்து காணப்படும்.

ஞானவான்களையெல்லாம் தன்னகத்தே ஈர்த்து ஆட்கொண்டிருப்பதால்தான் அண்ணாமலையை ‘ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அண்ணாமலை’ என்று சான்றோர் சிறப்பித்துப் பாடுகின்றனர்.இந்தத் திருவண்ணாமலையில் 1889ஆம் ஆண்டிலிருந்து 1929ஆம் ஆண்டு வரை சுமார் 40 ஆண்டுகள் நடமாடிய சித்தர் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார்கள். இவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் பல.

தீராத நோய்களைத் தீர்த்தும், வாழ்விற்குத் தேவையான வளங்கள் பல தந்தும் பக்தர்களைக் காத்தருளினார். உதாரணமாக, ஒருமுறை சுவாமிகள் திருவண்ணாமலை திருத்தலத்தில் அமைந்துள்ள குளத்தில் நீராடிவிட்டு, வாயைக் கொப்பளித்து அந்த எச்சில் நீரை ஒரு நோயாளியின் மீது உமிழ்ந்தார். அப்போது அந்த நோயாளி பூரண நலம் பெற்றார் என்பது சுவாமிகள் நிகழ்த்திய திருவிளையாடல்களில் ஒன்று.

பகவான் ரமணரையே தக்க தருணத்தில் காத்த கருணை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளுக்கே உண்டு. ஆழ்ந்த மனதிடத்துடன் அண்ணாமலை வந்த ஸ்ரீரமணர் பாதாள லிங்கத்துக்கு அருகில் அமர்ந்து பலகாலம் தவம் இயற்றினார். அவரது உடம்பைப் பூச்சிகளும் எறும்புகளும் கடித்துப் புண்படுத்தின. சில மனிதர்களும்கூட சிறுவன் என்று சுவாமிகளை இகழ்ந்து கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். அப்போது தன் சீடரை அழைத்து, ‘என் குழந்தை அங்கே தவமிருக்கிறான். அவனைச் சென்று பார் ’ என்று அனுப்பி ரமணரைக் காத்த கருணை பகவான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையே சாரும்.

இத்தகு பெருமைகளைக் கொண்ட சுவாமிகள் தன் வாழ்நாளில் அதிகமாக வசித்தது மூன்று ஊர்களில்தான். ஒன்று தான் பிறந்த வழூர். இன்னொன்று தான் வளர்ந்த காஞ்சிபுரம். பின் பலகாலம் வாழ்ந்து சமாதி கொண்ட திருவண்ணாமலை.சுவாமிகள் வளர்ந்த காஞ்சிபுரத்திலும் சித்தி பெற்ற திருவண்ணாமலையிலும் சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னமும் அதிஷ்டானமும் காணப்படுகிறது. ஆனால், அவர் அவதரித்த வழூரில் ஒரு நினைவுச் சின்னமும் இல்லாமல் இருந்தது.

அந்தப் பெருங்குறையைப் போக்கும் வகையில், அண்மையில் வழூரில் மாபெரும் செலவில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பெற்று வைதீக முறைப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுவும் வழூரில் ஏதோவொரு பகுதியில் இந்த மணிமண்டபம் அமைக்கப் படவில்லை. சுவாமிகளின் இல்லம் அமைந்திருந்த அதே இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

அழகான அல்லிக்குளக்கரையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் ஏழு ஸ்தூபிகள் கொண்ட இராஜகோபுரத்தோடு காட்சி தருகிறது. கருவறையில் கருங்கல் சிற்பத்தில் மகான் அருள் செய்கிறார். இந்த சிலை பிரதிஷ்டையில் ஒரு சிறப்பு காணப்படுகிறது. அது என்னவென்றால், சிலை பிரதிஷ்டையின்போது பெரும்பாலும் ‘கொம்பரக்கு, சுக்கான்தூள், செம்பஞ்சு, சாதிலிங்கம், கற்காவி எருமை வெண்ணெய், குங்குலியம், தேன்மெழுகு’ ஆகிய எட்டுவிதமான பொருட்களை இடித்து அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது வழக்கம். இதேபோன்று தங்கத்தை உருக்கி ஊற்றிப் பிரதிஷ்டை செய்வர். அதற்கு ‘சொர்ண பந்தனம்’ என்று பெயர். மேலும், முற்காலத்தில் வெள்ளியை உருக்கி ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். அதற்கு ‘ரஜித பந்தனம்’ என்று பெயர். இது தற்காலத்தில் எங்கும் செய்யப்படுவது இல்லை.

ஆனால் சேஷாத்ரி சுவாமிகளின் சிலை பிரதிஷ்டையில் அஷ்ட பந்தனமும் வெள்ளிக் கவசமும் சாற்றி ‘ரஜித பந்தனமும்’ செய்யப்பட்டுள்ளது என்பது மாபெரும் சிறப்பாகும்.யாரும் கண்டிராத இந்த வழூரில் சுவாமிகளுக்காகத் திருப்பணி செய்ய நல்லுள்ளம் கொண்ட சில சான்றோர்கள் முன்வந்து இப்பெருஞ்செயலைச் செய்துள்ளனர்.

மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது பூமியை அகழும்போது கிடைத்த ஒரு சிவலிங்கமும் இங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ள இந்த வழூருக்கு வந்து பகவானை வழிபட்டால் சிவபெருமானையும் திருமாலையும் அம்பிகையையும் வழிபட்ட பலன் கிடைக்கும். எவ்வாறெனின், இவர் அண்ணாமலையில் தங்கி சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றதோடு திருமாலின் திருப்பெயரைத் தன் பெயரில் தாங்கி திருமாலின் அருளையும் பெற்றவர்.

அத்துடன் தன் இளமைவயதில் காஞ்சி புரத்தில் வளர்ந்தபோது காமாட்சியம்மன் கோயிலிலேயே இருந்து அம்பிகையின் பூரண அருளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகு காரணத்தினால்தானோ, காஞ்சி பெரியவர், சேஷாத்ரி சுவாமிகளைப் போன்றே காலை மடித்து அமர்ந்து, இடக்கையைக் கன்னத்தில் வைத்து, ‘‘நான் சேஷாத்ரி சுவாமிகள் போலே ஆவேனா? எனக்கு அந்த நிலை கிடைக்குமா?” என்று ஆசைப்பட்டார். அந்த மகானை வழிபட அனைவரும் அவரின் அருளைப் பெறவேண்டும். அவரின் அருள் இருந்தால்தானே அவரின் அடிமலர்களை வணங்கமுடியும்!

சிவ.சதீஸ்குமார்

The post கண்டறியாதன கண்டேன் appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED பிள்ளையாரை வழிபட கிடைக்கும் பலன்கள்