வேலூர், ஆக.1: கடந்த 2015ம் ஆண்டு மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பங்களாதேஷ் ஆசாமி போலி பாஸ்போர்ட்டுடன் வேலூர் லாட்ஜில் தங்கியிருந்தார். அவரை போலீசார் சோதனையின்போது கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு மேற்குவங்கம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், அசாம், சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்களும், பூடான், பங்களாதேஷ் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் மொழியால் வங்கமொழியை பேசுவதாலும், உருவம் மேற்கு வங்கத்தவரை ஒத்திருப்பதாலும் இவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.
இதை பயன்படுத்தி பங்களாதேஷை சேர்ந்தவர்கள் இந்தியாவின் ஆதார் அட்டையை போலியாக பெற்று தங்களை இந்தியர் என்று அடையாளப்படுத்தி இங்கேயே தங்கி விடுகின்றனர். இதனால் உளவுத்துறை போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அவ்வப்போது லாட்ஜ்களிலும், மேன்சன்களிலும் சோதனை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் வேலூர் வடக்கு போலீசார் காந்தி ரோடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். இதில் திரிபுரா மாநிலத்தில் லஷ்மண்தாஸ்(28) என்ற பெயரில் பெற்ற ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டுடன், இந்திய குடிமகன் அடையாளத்துடன் தங்கியிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பங்களாதேஷ் நாட்டின் பெனி மாவட்டம் குசுல்லா கிராமத்தை சேர்ந்த மன்மோகன் சுகியதர் மகன் பிமல் சூத்ரதர் என்று தெரிய வந்தது. இதையடுத்து பிமல் சூத்ரதரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பிமல் சூத்ரதர், கடந்த 2015ம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டில் இருந்து மேற்கு வங்கம் வழியாக நடந்தே இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் வேலூருக்கு வந்து இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், திரிபுரா மாநிலம் சென்று போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றதோடு, இவைகளை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளார். அதன் மூலம் தொடர்ந்து வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்லும் பீகார், மேற்குவங்கம் மாநிலம் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி சீட்டு பெற்றுத்தருவது உள்ளிட்டவற்றுக்கு புரோக்கராக செயல்பட தொடங்கி உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம். மேலும் வேறு யாராவது போலி ஆவணங்களில் வேலூரில் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரித்து தீவிர சோதனை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
The post போலி பாஸ்போர்ட்டுடன் லாட்ஜில் தங்கியிருந்த பங்களாதேஷ் ஆசாமி கைது வேலூரில் போலீசார் சோதனையில் சிக்கினார் 2015ம் ஆண்டு மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து appeared first on Dinakaran.