சிறப்பு செய்தி
மனிதனால் செய்யப்படுவது வியாபாரம். அந்த மனிதனையே மூலப்பொருளாக்கி நடக்கும் ஒரு கொடுமையான வியாபாரம் தான் மனிதக்கடத்தல். இந்த வகையில் மனித கடத்தல் என்பது அனைத்து பாலினம், வயது, இனம், கலாச்சாரம் கடந்தும் நடக்கிறது. தங்களுக்கு தேவையான உழைப்பு மற்றும் பாலியல் செயல்களுக்காக ஒருவர் வாங்கப்பட்டு விற்கப்படுவது தான் மனிதக்கடத்தல் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மனிதக்கடத்தல் என்பது ஒரு வகையான அடிமைத்தனம் என்றும் கூறலாம்.
மிகவும் ஆபத்தில் இருப்பவர்கள், குழந்தைகள், பெண்கள், பதின்ம வயதினர், வீடற்ற நபர்கள், புலம் பெயர்ந்ேதார் என்று இக்கட்டான சூழலில் இருப்பவர்களே அதிகளவில் கடத்தலுக்கு ஆளாகின்றனர். ஆனால் தாங்கள் கடத்தப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. இது போன்ற அவலங்களுக்கும், கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 30ம் தேதி (நேற்று) ‘மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நடப்பாண்டு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நாளின் இலக்கு ‘குழந்தைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி’ என்பதாகும்.
உலகளவில் கடத்தப்படுவோரில் குழந்தைகள்தான் அதிகளவில் உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுகின்றனர். இந்த கடத்தல்கள் பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தலுக்காகவே நிகழ்கிறது. இது போன்ற நேரங்களில் அவர்கள் இறப்பை தழுவும் கொடுமையும் அதிகளவில் நடந்து வருகிறது என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு சிலநேரங்களில் குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ காரணமாகும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிருந்து பிறமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கொத்தடிமை தொழிலுக்காகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும் பெண்கள், சிறுமிகள் அதிகளவில் கடத்தப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தவகையில் சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தலை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் மிகவும் அவசியமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மனிதஉரிமை மேம்பாட்டு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:ஆள்கடத்தல் என்பது ஒரு உலகளாவிய அவலமாக உள்ளது. இதில் குறிப்பாக ஏழைநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வளர்ந்த நாடுகளுக்கு ஏஜெண்டுகள் அனுப்புவது சமீப ஆண்டுகளாக நூதன மனிதக்கடத்தலாக மாறி வருகிறது. இந்தவகையில் இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளுக்கு சென்ற ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று பலர் திரும்பி வரமுடியாமல் உள்ளனர். அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து அரசிடம் முறையிட்டு வருவதும் இதற்கான சான்றுகளாக மாறி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை பணத்துக்காக ஆட்களை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3ஆண்டுகளில் மட்டும் பணத்துக்காக நாடு முழுவதும் மொத்தம் 1,57,717ஆள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதேநேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை பொறுத்தவரை பெண்கள், சிறுமிகளை கடத்தும் சம்பவங்கள் 19.2சதவீதம் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கு உறவினர்களே வழிவகுத்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 10ஆண்டுகளில் இந்தியாவை பொறுத்தவரை 1.12லட்சம் குழந்தைகள் மாயமாகி உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கம், டெல்லி, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் குழந்தைகள் அதிகளவில் மாயமாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்படுகிறது. ஆனால் குழந்தைகள், சிறுமிகள் கடத்தல் சம்பவங்களை பொறுத்தவரை வழக்குப்பதிவு செய்வதை முடிந்தவரை தவிர்த்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவோர் அடித்தட்டு மக்களின் குழந்தைகளாக இருப்பதும், பாதுகாப்பற்ற சூழலில் வசிப்பதும் இதற்கொரு முக்கிய காரணம்.
ஏழ்மையும், வறுமையும் குழந்தைகள் கடத்தலுக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சமூகத்தில் அந்தஸ்து கொண்டவர்கள் கடத்தப்படும் போது காட்டும் அக்கரையை சமானியர்களின் குழந்தைகள் கடத்தப்படும் போது போலீசார் காட்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை. எனவே இதை மனதில் நிறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் அவசியமானது. மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாவிட்டாலும் அனைத்து உயிர்களுக்கும் உடல் ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு இயந்திரங்களின் கடமை. அதை சட்டரீதியில் முழுமையாக செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
அடிமையாக நடத்தும் உரிமை யாருக்குமில்லை
‘‘அனைத்து மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் நியாயத்தையும், மனசாட்சியையும் இயற்பண்பாக பெற்றவர்கள்.இந்த வகையில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. யாரையும் அடிமையாக நடத்த யாருக்கும் உரிமை இல்லை. சித்ரவதைகளுக்கும், மனித தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் என்பது அனைத்து உயிர்களுக்குமான உரிமை. இவை யாவும் பாரபட்சமின்றி கிடைப்பதற்கான சட்டபாதுகாப்பும் அவர்களுக்கு உள்ளது. இதை இந்தநாளில் உணர்ந்து செயல்படுவதும் மிகவும் அவசியம்,’’ என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.
The post கடந்த 10 ஆண்டுகளில் 1.12 லட்சம் பேர் மாயம்; குழந்தைகளை கடத்தும் அவலம் அதிகரிப்பு: ஆய்வாளர்கள் வேதனை appeared first on Dinakaran.