×

ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் உயிரிழப்புக்கு காரணமான கல்லீரல் பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் விளக்கம்


கல்லீரல் என்பது மனித உடலில் ராஜ உறுப்புகளில் ஒன்றாகும். அதன் செயல்பாடுகள் என்பது மகத்தானது. குறிப்பாக, உணவு, மருந்து மற்றும் சுற்றுச்சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை நச்சுத்தன்மை அற்றதாக மாற்ற உதவுகிறது. ரத்தம் உறைதலிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது உறைதல் காரணிகளின் உற்பத்திக்கான முக்கிய பகுதியாகும். சமீப காலமாக, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றம் காரணமாக, கல்லீரல் நோய் உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கல்லீரல் நோயால் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பேர் இறக்கிறார். மொத்த இறப்புகளில் இது 4 சதவீதம் ஆகும். கல்லீரல் அழற்றி மற்றும் கல்லீரல் வீக்கம் போன்றவை வைரஸ் போன்ற தொற்றுகளாலும், கெமிக்கல்கள், மருந்துகள், ஆல்கஹால் மற்றும் சில அரிய மரபணு கோளாறுகள் போன்ற தொற்று அல்லாத நோய்களாலும் ஏற்படும்.

கல்லீரல் பாதிப்பு மற்றும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தனியார் மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநர் ஜாய் வர்கீஸ் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வைரஸ் ஹெபடைடிஸ் (கல்லீரல் பாதிப்பு) பற்றிய விழிப்புணர்வு குறித்த விவரங்கள் மற்றும் தடுப்புக்கான உலகளாவிய முன்முயற்சியை செயல்பட வேண்டிய நேரம் என்ற கருப்பொருளின் கீழ், தொடங்கியுள்ளது.
ஹெபடைடிஸ் பி (கல்லீரல் வீக்கம்) தொற்று பெரும்பாலான வளரும் நாடுகளில், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக உள்ளது. இந்தியாவில் சுமார் 36 மில்லியன் மற்றும் 6 மில்லியன் மக்களில் நாள்பட்ட (வாழ்நாள் முழுவதும்) நோய்த்தொற்றுடன் ஹெபடைடிஸ் பி மற்றும் சி (கல்லீரல் செயலிழப்பு) ஆகியவற்றுக்கு இடைநிலை இடப்பெயர்ச்சி உள்ளது. ஹெபடைடிஸ் ரைவஸ் பிரச்னைகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர். ஹெபடைடிஸை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஹெபடைடிஸ் ஏ-ஈ என பெயரிடப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ரத்தத்தில் பரவும் தொற்றுகள் ஆகும்.

அதில் குறிப்பாக ஹெபடைடிஸ் பி தொற்று பெரும்பாலான வளரும் நாடுகளில், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக உள்ளது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ ஆகியவை அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் காரணமாக ஏற்படுகிறது. மற்ற 3 வைரஸ்கள் – பி, சி மற்றும் டி ஆகியவை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பரவும் ரத்தம் மூலம் பரவும் தொற்று ஆகும். அவை பல்வேறு விதமாக பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல், பாதுகாப்பற்ற ஊசி, பாதுகாப்பற்ற ரத்த மாற்றம், காயங்கள் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவற்றின் காரணமாகவும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய ரேசர்கள் மற்றும் பிரஷ் போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. ஹெபடைடிஸ் பி வைரசால் அனைத்து நபர்களும் பாதிக்கப்படுவதில்லை.

இந்த வைரசால் அதிக அளவிலான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிறிய விகிதம் மட்டுமே (தோராயமாக 10 சதவீதம்), குறிப்பாக குழந்தை பருவத்தில் தொற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு வைரஸை அழிக்க முடியவில்லை. காலப்போக்கில், இது ஈரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் வடிவத்தில் நிரந்தர கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுத்தர வயதுடையவர்களிடையே (30 – 60 வயது) இது மிகவும் பொதுவானது. கடுமையான ஹெபடைடிஸ் பி ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. அதை மருத்துவ பரிசோதனையில் மட்டுமே கண்டறிய முடியும். ஏறக்குறைய 90 சதவீதம் பாதிக்கப்பட்ட மக்கள் ஆன்டிபாடிகளின் வளர்ச்சியுடன் குணமடைவார்கள் மற்றும் 6 மாதங்களுக்குள் அவர்களின் உடலில் இருந்து வைரஸ் நீங்கும். அதில் ஒரு சிறு பகுதியினர் மட்டும் குழந்தை பருவத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதில் பலருக்கு காலப்போக்கில் கல்லீரலில் அதிக அளவிலான பாதிப்பு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 80 – 90 சதவீதம் கைக்குழந்தைகள் மற்றும் 30 – 50 சதவீதம் குழந்தைகள் 6 வயதுக்கு முன் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

நாள்பட்ட நோய்த்தொற்று உள்ளவர்கள் இறுதியாக கல்லீரல் ஈரல் அழற்சி அல்லது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். ஹெபடைடிஸ் பி தொற்று கல்லீரல் பாதிப்பு தவிர, தோல் வெடிப்பு, ரத்த சோகை, ரத்த நாளங்கள், மூட்டுகள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான சோர்வு, வயிற்று வலி, உடல் வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் கிளைசெமிக் இன்டெக்ஸ் தொந்தரவுகள் ஆகியவை ஹெபடைடிசின் பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான நோய் இருக்கும்போது, நிறம் மாறிய சிறுநீர், கண்களின் மஞ்சள் நிறமாற்றம், கால் வீக்கம், வயிறு இறுக்கம், அசவுகரியம், ஈறுகளில், மூக்கில் ரத்தப்போக்கு, தூக்கக் கலக்கம் மற்றும் கோமா போன்ற நிலையை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி நோயை கண்டறிய ரத்தப் பரிசோதனைகள், ரத்தத்தில் உள்ள வைரஸ்களுக்கான பரிசோதனைகள், ரத்தத்தில் வைரஸ் டிஎன்ஏ, ஆர்என்ஏவை கண்டறிதல் மற்றும் அடிவயிற்றின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகியவை ஆகும். சில மேம்பட்ட ஸ்கேன்களான பைப்ரோஸ்கேன், காந்த அதிர்வு எலாஸ்டோகிராபி ஆகியவை இதற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

இதில் பைப்ரோஸ்கானின் நன்மை என்னவென்றால், இது கல்லீரலில் உள்ள கொழுப்பு பகுதியையும், கல்லீரல் பாதிப்பின் அளவையும் துல்லியமாக கண்டறிய உதவுகிறது. சாப்பாட்டுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவுகள், எச்பிஏஒன்சி அளவுகள், ரத்த கொழுப்பு அளவுகள், ட்ரைகிளிசரைடு அளவுகள் மற்றும் ஹெச்ஓஎம்ஏ இன்சுலின் அளவுகள் ஆகியவை ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு ஆபத்து காரணிகளை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை முறைகளாகும். நாள்பட்ட ஹெபடைடிஸ் வைரசை உருவாக்கும் அனைத்து நபர்களுக்கும் என்டெகாவிர், டெனோபோவிர் போன்ற வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளும்போது அவை குறைவான பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

இருப்பினும், அவை அனைவருக்கும் முழுமையான சிகிச்சையாக இருப்பதில்லை. எனவே சில நோயாளிகள், அவற்றை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இது கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை தாமதமாக்குகிறது. நீண்ட கால உயிர்வாழ்வதற்கு உதவுவதோடு, கல்லீரல் புற்றுநோய் உருவாவதை குறைக்கிறது. ஹெபடைடிஸ் பி தொற்று தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை மற்றும் 1985ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின்படி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும், பிறந்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும். ஆரம்ப டோஸ் தொடர்ந்து 6, 10 மற்றும் 14 வாரங்களில் 3 தொடர்ச்சியான டோஸ்கள் (தற்போது டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ் மற்றும் எச் இன்ப்ளூயன்ஸா தடுப்பூசிகளுடன் பெண்டாவலன்ட்) தடுப்பூசி வடிவில் கொடுக்கப்படுகிறது.

இவை 95 சதவீத குழந்தைகளில் பாதுகாப்பு ஆன்டிபாடி அளவை தூண்டும் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும். ஹெபடைடிஸ் பி என்பது உலகளவில் மிகவும் பாதுகாப்பான மற்றும் மிகவும் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளில் ஒன்றாகும். இதில் மிகக் குறைவான பக்க விளைவு உள்ளது. ஹெபடைடிஸ் பி அறக்கட்டளை இந்த தொற்றுக்கு ஆபத்தில் உள்ள அனைத்து நபர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த எளிய நடவடிக்கை ஹெபடைடிஸ் பி தொடர்பான நோய்கள், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும், மேலும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உங்களை அனுமதிக்கும் என்று கூறுகிறது. யாரேனும் இதுவரை ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடப்படவில்லை என்றால், உங்கள் மருத்துவர் அணுகி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகளை போட்டுக்கொள்ளுதல், பயன்படுத்திய ஊசிகளை பயன்படுத்தாமல் இருத்தல் ஆகியவை இந்த நோய் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

ரத்த தானம் செய்பவர்களை சரியான முறையில் தேர்வு செய்தல், ரத்தம் செலுத்துவதற்கு முன் அனைத்து ரத்த பொருட்களையும் தரம் உறுதி செய்தல் ஆகியவை மிகவும் முக்கியமாகும். இதேபோல் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளும்போது இந்த நோய் வராமல் தடுக்க முடியும். வெற்றிகரமான தடுப்பூசி திட்டங்களுக்குப் பிறகு, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றின் பரவல் என்பது மெதுவாக குறைந்து வருகிறது. இப்போது ஹெபடைடிஸ் குறித்த முக்கிய கவலை வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய் பற்றியதாகும். நோயாளிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே மருந்துகள் தேவைப்படலாம் மற்றும் ஹெபடைடிஸ் உள்ள பெரும்பாலான நபர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் அதை நிர்வகிக்க முடியும். குணப்படுத்துவதை விட இந்த நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. எதிர்காலத்தில் பெரிய அளவிலான கல்லீரல் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கு எளிய முறையிலான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கை முறையில் மாற்றம்
முறையான மருத்துவ பரிசோதனை மூலம் ஆபத்து காரணிகளை கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கும்போது. இந்நோய் பரவலை நம்மால் தடுக்க முடியும். உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் முக்கியம், ஹெபடைடிஸ் வராமல் தடுப்பதே சிறந்தது, கவனமுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

உணவு பழக்க வழக்கம்
அதிகரித்து வரும் இந்நோய்க்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்த வேலை முறை ஆகியவை ஆகும். இதுதவிர, மது அருந்துவது ஹெபடைடிஸ் வருவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக உள்ளது. பிற அரிதான காரணங்களில் ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய் (ஒருவரின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலை சேதப்படுத்தும்), சில மரபணு நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஆகியவற்றாலும் ஏற்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட ஆபத்துகள் உள்ள அனைத்து நோயாளிகளும் அடிப்படை ரத்த பரிசோதனைகள் மற்றும் கல்லீரல் ஸ்கேன் மூலம் தங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது.

நோய் தடுப்பு வழிமுறைகள்
* ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல்.
* அதிகப்படியான சர்க்கரை, நிறைந்த உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
* மது உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எடுக்காமல் தவிர்த்தல்.
* தினசரி உடற்பயிற்சி, 30 முதல் 45 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சி அவசியம்.
* வழக்கமான மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசி.

The post ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் உயிரிழப்புக்கு காரணமான கல்லீரல் பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...