நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் புறக்கணித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

புதுச்சேரி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று கூடியது. இதில் பாஜ மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காரணமாக எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்ற நிலையில் இம்முறை ரங்கசாமி செல்வார் என கூறப்பட்டது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் கேட்டபோது, மழுப்பலாக பதிலளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளார். 3வது முறையாக கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், ஏற்கனவே நடைபெற்ற தேஜ கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி விரிசல்தான். நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவியபின், என்ஆர் காங்கிரஸ், பாஜ இடையே உரசல் நீடித்து வருகிறது. அமைச்சர்களை மாற்ற வேண்டுமென அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜவில் தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டம் வரும் 31ம் தேதி துவங்கவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்புகூட 5 எம்எல்ஏக்கள் டெல்லியில் 3 தினங்கள் முகாமிட்டு திரும்பினர். இந்த கூட்டத்தொடருக்கு கூட தாமதமாக ஒன்றிய அரசு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் முதல்வர் ரங்கசாமி, பாஜ மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகின.

மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான அரசு எதிர்பார்த்த நிதியும் கிடைக்கவில்லை. மேலும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நியமன எம்எல்ஏக்கள் மீதும் அக்கட்சி நடவடிக்கை எடுக்காதது என்ஆர் காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி கடைசி நேரத்தில் தடாலடியாக புறக்கணித்துள்ளார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வரோ, அரசின் பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை என்பதை உறுதியானது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தபிறகு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்ல திட்டமிடிட்டிருப்பதாகவும், அப்போது பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் புறக்கணித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: