102 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்

நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர்களின் இருக்கைக்கே சென்று கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, 9 பயனாளிகளுக்கு தலா ரூ.1.06 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், 20 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 மதிப்பிலான டெய்சி பிளேயர்கள், 42 பயனாளிகளுக்கு இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம், 3 பயனாளிகளுக்கு விபத்து நிவாரணமாக தலா ரூ.2 லட்சம், 21 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்கள் என மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.32.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

மேலும், 2022ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ராதாபுரம் தாலுகா, திசையன்விளை பகுதியில் போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்டார். இரண்டரை வருட பராமரிப்புக்குப் பின்பு முகவரி மற்றும் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டது.

இவர் பீகார் மாநிலம், ஹயா மாவட்டம், பெலகஞ்சி பகுதியை சார்ந்தவர் என்பதை அறிந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post 102 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: