×

தமிழ்நாடு இல்ல மறுமேம்பாடு திட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் டெல்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் கட்டப்படஉள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கடந்த 2021 ஜூன் 18ம் தேதி முதல்வரின் தலைமையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடந்த கூட்டத்தில், டெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் – 4 ஆக மறுவகைப்படுத்தப்படுத்துள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை செய்ய விரிவான ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரை படங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன. அதன்படி புதியதாக கட்டப்பட உள்ள இந்த கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை ஐஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் டெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மறுமேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களின் விவரங்கள்:
* புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது.
* இந்த கட்டிடம், 3 அடி தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்.
* மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள் (Deluxe Rooms), 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம் (Dormitory), பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொது துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொது துறை அரசு துணை செயலாளர் (மரபு) பத்மஜா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், துரை வைகோ, செல்வராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, கூடுதல் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு இல்ல மறுமேம்பாடு திட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : CM M K Stalin ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,Vaigai Tamil Nadu Illa ,Delhi ,Chanakyapuri ,Delhi Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்