×

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு

தாய் தமிழ்நாடு விட்டுவந்த போதும், அயல்மண்ணில் தமிழையும் அதன் சொல்லின் சிறப்புதனையும் தைவானில் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டுச்செல்லும் சீரியபணிதனை தைவான் தமிழ் சங்கம் செவ்வனே செய்து வருகிறது. அவ்வண்ணமே, தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஐந்தாம் அமர்வு தைபேய் (Taipei) நகரில் உள்ள தேசிய  தேசிய தைபேய் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (National Taipei University of Science and technology) சிறப்பாக நடைபெ ற்றது. முனைவர். சுப்புராஜ் அவர்களின் சீரிய தலைமையில் திரு குபேந்திரன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்த சிறப்பாக நடைபெற்றது.

இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்

முதலாவதாக ‘இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்’ என்ற தலைப்பில் கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தமிழ்ப்  பேராசிரியரும் வர்மக்கலை ஆசானுமான முனைவர் சண்முகம் அவர்கள் காணொளி மூலம் சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ் தொண்டினை பாராட்டியும் அது மென்மேலும் வளர வாழ்த்துக்களும் கூறி தன் உரைதனை தொடர்ந்தார்.

தமிழ் மொழியின் தொன்மை, பழமை, செழுமை ஆகியவற்றை இவ்வுலகம் நம் முன்னோரின் கூற்றுகள் மூலம் அறிய இயலும். எனவேதான் பேரறிஞர்கள் பலரும் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது தமிழ் எனக்கூறுகின்றனர். தமிழ் என்ற சொல்லை பலமுறை சொல்லும்போது அமிழ்து என வரும். எனவேதான் பாரதிதாசன் தமிழுக்கு அமிழ்து என்று பேர் என்றார். அமிர்தம் எனப்படும் அமிழ்தை உண்டவர்க்கு அழிவில்லை என்பர் அதுபோலவேதான் தமிழை பேசியவர்கள், பேசுபவர்கள், தமிழை சுவாசிப்பவர்கள் இருக்கும்வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் அழிவில்லை. இதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கே சான்று. இந்த உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தும் எதிலும் சொல்லப்படாத ஒரு அற்புதமான தத்துவம்.

உலகில் உள்ள அனைவரையும் உறவினர்களாக பார்க்கவேண்டும் என்ற இத்ததுவத்தை தமிழனை தவிர எவராலும் சொல்லபபடவில்லை.மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் சொல்லப்பட்ட ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’, இரண்டாம் நூற்றாண்டில் வள்ளுவனால் சொல்லப்பட்ட ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘காக்கை குருவிகளும் எங்கள் சாதி’ என்ற பாரதியின் கூற்று, ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் கூற்று என பழந்தமிழின் கூற்றுகள் பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த உலகிற்கு இந்தகைய உயரிய தத்துவங்களை தமிழனால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு தமிழ் சித்தாந்தங்களை எடுத்துரைத்து ஐம்புலன்கள் எவ்வாறு நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது என்பதையும் தமிழ் மொழி மேலும் பல வாழ்வியல் நெறிமுறைகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளது என்பதை பற்றியும் சிறப்பாக பேசிமுடித்தார்.
 
பெண் ஏன் அடிமையானாள்

இரண்டாவதாக ‘பெண் ஏன் அடிமையானாள்; என்கிற தலைப்பில் தேசிய தைவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் திரு ரஜிஷ்குமார் குமார் அவர்கள் பேசினார். தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு, திராவிட சொல்லின் மூலம் மற்றும் அறிமுகம், தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்டை தென்மாநிலங்கள் மற்றும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்புகள், திராவிட இயக்கங்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் பேசினார்
அவர் தனது உரையின் தொடக்கமாக சமத்துவத்தின் அடையாளமே தோழர் என்ற சொல் எனவும் தற்போதய பெண்களின் மீதான தாக்குதல் களுக்கு வருத்தங்ககளையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு நம் சமூகம் கொடுக்கும் தீர்வுகள் அனைத்தும் பெண்களின் மீதான அடக்குமுறையும் ஆணாதிக்க சிந்தனைகளின் வெளிப்பாடே. இன்றைய சூழ்நிலையில் காதல் என்பது உன்னதமானது, மென்மையானது மற்றும் கண்டவுடன் வரும் காதலே சிறப்பானது என திரைப்படங்களின் ஊடாக வெளிப்படுத்தபப்டுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவ்வாறு நடப்பது இல்லை அது தகுதி, பொருளாதாரம், சாதிய கண்ணோட்டம் இதன் அடிப்படையிலே வருகின்றது. மேலும் பெற்றோர்களின் வற்புறுத்துதலும் காதலை தவறான பாதைகளில் வழிநடத்துகிறது. இதிலும் பெண்களின் ஒருதலைக்காதல் தற்கொலையிலும் ஆண்களின் ஒருதலைக்காதல் கொலையிலும் முடிகிறது. இது பெண்களின் மீதான ஆணாதிக்க சிந்தனை எத்தகைய கொடூரமாக திணிக்கப்படுவதை காட்டுகிறது.

அடுத்ததாக கற்பு என்ற விடயம் உண்மைத்தண்மை என்ற பொருளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பெண் தனக்கான துணையை தானே தன் விருப்பபடி தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்டால் அது கற்பிழப்பு எனவும் , அதுவே பெற்றோர்களால் தெரிவு செய்யபப்ட்ட ஆணுடன் இருந்தால் நேர்மையானது உண்மையானது எனவும் அப்பெண் கற்புடன் வாழ்கிறாள் என போற்றப்படுகிறது. கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் ஆண்களுக்கு அல்ல. என்று பெண்கள் கற்பு என்கிற விடயத்தின் மூலமாக அடிமையாக்கப்படுகிறாள். இத்தகைய அடிமைப்படுத்துதல் ஆதிகாலத்தில் இருந்து நம் சங்க இலக்கிய காலம் தொட்டு இன்றளவும் தொடர்கிறது. இதற்கு சான்றாக நம் தமிழில் சிலப்திகரம் முதல் பல நூல்கள் காணப்படுகிறது.

ஆதிகாலம் முதலே அனைத்து மதத்திலும் சரி, பின்னாளில் எத்தகைய சாதியகூறுகள் வந்தபோதும் சரி, பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம் இந்திய திருநாட்டில் அறிஞர்கள் பலர் வந்தாலும் அண்ணல் அம்பேத்காரும் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் பெண் கல்விக்காக போராடி பெற்று தந்தனர். மேலும் அவர் தன் உரையில் பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்து பெண் ஏன் அடிமையானாள் என்பதை விரிவாக பேசி முடித்தார். இவ்வுரையின் விவாத்தின் போது இந்திய- தைவான் ஒருங்கிணைப்பின் முதன்மை இயக்குனர் திருமிகு ஸ்ரீதரன் மதுசூதனன் தன் மனைவியோடு கலந்து கொண்டு  தன் சிறப்பான விளக்கங்களை  அளித்தார்.
 
தமிழர்களும் ஆன்மிகமும்

மூன்றாவதக தேசிய டொன்ஹுவா பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் திரு தயானந்த பிரபு அவர்கள் ‘தமிழர்களும் ஆன்மிகமும்’ என்ற தலைப்பில் பேசினார். பண்டைய தமிழர்களின் வழிபட்டு முறை இயற்கையை வணங்குதல் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முனபாக எழுதப்பட்ட திருக்குறளில் திருவள்ளுவர் '' தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'' என்ற குறள் மூலம் நம் முன்னோர்கள் கடவுளை நம்பியதை  விட அவரவர் முயற்சி உழைப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து வாழ்ந்துள்ளனர் என்பதும், மதம் சார்ந்து இல்லாமல் தமிழன் வாழ்ந்தான் என்பது புலப்படும்.

மேலும் தமிழர்களின் வழிபாட்டு முறை தற்போதுள்ள முறையாக இருந்திருக்க வாய்ப்பு குறைவு, இதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முதலாவதாக  இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்துப்பாடல் என் ஒன்றும் இல்லை. அதில் வாழ்த்துப்பாடல் திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமலை போற்றுதும் என பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதம் என ஒன்றும் கடவுள் என ஒருவர் இருந்ததாக தெரியவில்லை. எனவே பண்டைய தமிழன் இயற்கையை போற்றி வந்துள்ளான். நம் பொங்கல் பண்டிகையே இதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.

மேலும் கீழடி தொல்லியல் ஆய்வுகள் இத்தகைய இயற்கை வழிபாட்டிற்கு வலுசேர்ப்பதாக உள்ளது. அங்கு தோண்டி எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சுமார் 3000~3500 ஆண்டுகள் பழமையானது. அதில் மதம், கடவுள் ஆன்மிகம் பற்றிய இத்தைகைய சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அங்கு கிடைக்கபெற்ற ஒரு தங்க கட்டிலில் கோதை என்ற சொல்லும், மண் ஓட்டில் மாடச்சி என்ற சொல் இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது, எனவே பண்டைய தமிழன் மத வழிபாடு அன்று, இயற்கை மற்றும்  முன்னோர் வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது.

வரலாற்று தரவுகள் அனைத்தும் பண்டைய தமிழன் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாடு செய்ததாகவே கூறுகிறது. ஆனால் இதிகாசங்கள் மட்டுமே  கடவுள் ஆன்மிகம் என பல்வேரு கோட்ப்பாடுகளை தருகிற்து.. இதிகாசங்கள் கற்பனை கலந்து எழுதப்பட்டவை. ஆனால் வரலாற்று கூறுகள் நடந்தவற்றை அப்படியே எழுதுதல் ஆகும். மேலும் அவர் தன் உரையில் தமிழனின் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டிற்கான பல்வேறு சான்றுகளை அடுக்கி பேசினார். தற்போதுள்ள மத ஆன்மீக குருக்கள் நல்லவற்றை போதிக்காமல் மத துவேஷங்களையும் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும் கூறி தன் உரையை முடித்தார்.

மருந்தில்லா மருத்துவம்

நான்காவதாக தேசிய தைவான் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திரு முத்து சங்கர் அவர்கள் ‘மருந்தில்லா மருத்துவம்’ என்ற தலைப்பில் பேசினார். நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரிசெய்ய முடியும் ,ஆனால் மற்ற விபத்து  போன்றவற்றிற்கு மருத்துவமனைக்கு செல்வது அவசியம் என பேசினார். மேலும் ஒரு நோய்க்கு மருத்துவம் என்பது நான்கு கூறுகளைக் கொண்டது. அவை நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவரால் நோயின் தன்மை அறிதல், அதற்கேற்ற மருந்து அளித்தல் மற்றும் அத்தகைய மருந்துகளை தயாரித்தல். இத்தகைய நான்கு கூறுகளை தவிர்த்து நோயின் தன்மைக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்தலே சிறந்தது.

‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்பது தமிழ் பழமொழி. எனவே எதையும் உண்ணும்போது அவ்வுணவை ரசித்து ருசித்து நன்றாக மென்று உண்பது அவசியம். அவ்வாறு செய்யும் போது நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மேலும் ஒரு நோயின் தன்மையை விளக்கும் விதமாக அவர் சர்க்கரை வியாதியை பற்றி விரிவாக பேசினார். சர்க்கரை நோய் என்பது வியாபார நோக்கிற்காக உருவாக்கப்பட்ட நோய். சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்ற வேதிப்பொருள் நம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது. இது நம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது.

செரித்த உணவில் இருந்து பெறப்பட்ட தேவையான அளவு குளுக்கோஸ் போக மீதமான குளுக்கோஸ் கிளைகோஜன் எனும் வேதிப்பொருளாய் மாற்றப்பட்டு உடலின் தசைகளில் சேமித்து வைக்கப்படும். தேவையானபோது மீண்டும் அவை குளுக்கோஸாக மாற்றி மீண்டும் பயன்படுத்தப்படும். சேமிக்கப்பட்ட க்ளைகோஜன் தேவையானபோது எல்லாம் பயன்படுத்தப்பட்டு முடிந்துவிடும் பட்சத்தில் குறை சர்க்கரை நோய் எனவும், இதுவே  தேவைக்கு அதிகப்படியான கிளைகோஜன் சேமித்து வைக்கும் பட்சத்தில் அதி சர்க்கரை நோய் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சரியான உணவு பழக்க வழக்கங்களின் மூலமும், சரியான உடற்பயிற்சி மூலமும் கட்டுப்படுத்த முடியும். இதுவே மருந்தில்லா மருத்துவம் ஆகும். இதற்கான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் சான்றுகள் உள்ளது எனவும் பல தீர்வுகள் உள்ளன எனவும் பேசிமுடித்தார். இந்த தமிழ் அமர்வில், தைவான் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், தைவான் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டு, அதன் பின் நடைபெற்ற விவாதங்களிலும் பங்கெடுத்தார்கள்.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா