×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடி மேட்டூர் அணை நீர்மட்டம் 70.80 அடியாக உயர்வு: டெல்டா பாசனத்திற்கு விரைவில் நீர் திறப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 65,000 கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57,409 கனஅடியாக அதிகரித்து, நீர்மட்டம் 70.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. நீர்வரத்தால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, பாறைகளாக தென்பட்ட ஐவர்பாணியில், அருவிகள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடிக்கிறது.

அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 71,777 கனஅடியாக அதிகரித்தது. இரவு 8 மணி நிலவரப்படி 57,409 கனஅடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70.80 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை மீண்டும் மூழ்கியது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 33.39 டிஎம்சியாக உள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயத்தால், செட்டிப்பட்டி மற்றும் கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 24 மணி நேரமும் தயார் நிலையிலும், கண்காணிப்பிலும் இருக்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.அணையின் நீர்வரத்தும் -திறப்பும் இதே நிலையில் இருந்தால், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், அடுத்த 10 நாட்களில் 100 அடியாக உயரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாலும், நீர்வரத்து தொடர்வதாலும் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளின் தேவையை பொருத்து, தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடி மேட்டூர் அணை நீர்மட்டம் 70.80 அடியாக உயர்வு: டெல்டா பாசனத்திற்கு விரைவில் நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Mettur ,Okanagan Cauvery ,Mettur dam ,Karnataka… ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!!