×

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அஞ்சலை புழல் சிறையில் அடைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் புதிதாக கட்டி வந்த வீடு அருகே கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம், வக்கீல் அருள் உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் ஆற்காடு சுரேசின் படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனிடையே கைதான 11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றது.

அப்போது போலீசார் பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம் போலீசார் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். கைதான கொலையாளிகளின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பெண் வக்கீல் மலர்கொடி, மற்றொரு வக்கீல் ஹரிஹரன், ஏற்கனவே கைதான வக்கீல் அருளின் உறவினர் சதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதாவும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான அஞ்சலையும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

ஓட்டேரியில் பதுங்கி இருந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அஞ்சலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஞ்சலையின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆராய்ந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அஞ்சலை புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Rawudi Mail ,Bagujan Samaj Party ,Armstrong ,Chennai ,President ,Bhandar Garden Street ,Perampur, Chennai ,Ponnai Balu ,Thiruvengadam ,Vakeel Arul ,Rawudi ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை...