×

பாதகங்களை சாதகங்களாக மாற்றிக்கொள்ளுங்கள்

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றின் செயலை மற்றொன்று தடுக்கும் அல்லது வளர்க்கும். இந்த கிரக விளையாட்டைப் புரிந்து கொண்டால் சில விஷயங்களை நாம் வாழ்வில் எதிர்கொள்ள முடியும். சமாளிக்க முடியும். மாற்று வழிகளைத் தேட முடியும். அதற்கு உதவுவது தான் நமது பிறப்பு ஜாதகம், நடைபெறுகின்ற கோச்சார (கோள் சார) நிலைகள்.

எல்லாக் கிரகங்களும் உச்சம், ஆட்சி அமைப்பில் அமைந்து விட்டால் நம்மை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது என்று நினைப்போம். ஆனால் அப்படி நினைக்க முடியாது.

கிரகங்கள் கூட, ஒரு நிலைக்கு மேல் அதிக உச்சநிலைக்கு போய் விடக் கூடாது. உதாரணமாக சுக்கிரன் அதி உச்சநிலையில் போய் விட்டால் காம உணர்வுகள் அதிகரிக்கும். அது வரம்பு கடந்து அதிகரிப்பதால் தவறான பல செயல்களைச் செய்து அவஸ்தைப்பட நேரிடும் அதைப் போலத்தான் செல்வமும். ஒருவனுக்கு மிக அதிக மான செல்வம் வந்துவிடுகிறது. அதோடு அவனுக்குப் பகையும் சேர்ந்து விடுகிறது. எனவே ஒரு நன்மைக்குள் தீமையும், தீமைக்குள் நன்மையும் புதைந்து கிடப்பது குறித்த விழிப்புணர்வும் ஞானமும் நமக்குத் தேவை.

பொதுவாகவே ஒரு பாவத்தின் 12வது பாவம் என்பது மிக முக்கியமான அமைப்பு. எந்த பாவத்தின் 12 வது பாவமும் அந்த பாவத்தின் செயலைக் கட்டுப்படுத்தும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு ஜாதகம், எத்தனை பெரிய அதிர்ஷ்ட ஜாதகமாக இருந்தாலும், நன்மையும் தீமையும் கலந்ததாகவே இருக்கும்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு பணம் செல்வாக்கு பதவி எல்லாம் இருக்கும். ஆனால் உடல்நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இருக்காது. எப்பொழுது பார்த்தாலும் ஆரோக்கியக் குறைவோடு இருப்பார்கள். ஒரு வாய் சாப்பாடு ஒழுங்காகச் சாப்பிட முடியாது. எதைச் சாப்பிட்டாலும் உடம்பு ஏற்றுக் கொள்ளாது. ஆக அந்த இடத்தில் ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றைப் பறித்துக் கொள்ளுகின்றான் என்பதை கவனிக்க வேண்டும்.

சிலருக்கு 10 குழந்தைகள் கூட அந்தக் காலத்தில் பிறந்திருக்கின்றன. அத்தனையும் ரத்தினங்கள் போல இருக்கும். ஆனால் அவருக்கு அந்த பத்து குழந்தைகளைக் காப்பாற்றக்கூடிய பணம் காசு வருமானம் இருக்காது. அதே நிலையில் 100 குழந்தைகளைக் காப்பாற்ற கூடிய செல்வமும் செல்வாக்கும் இருக்கக்கூடிய ஒருவருக்கு ஆசைக்கு ஒரு பிள்ளை பிறக்காது. சிலருக்கு தத்துப் பிள்ளையும் நிலைக்காது. இப்படி ஒவ்வொருவருக்கும் சில அமைப்புக்கள் நன்றாக இருக்கும். சில அமைப்புகள் நன்றாக இருக்காது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பாவத்தின் செயலையும் அந்த பாவத்தின் 6, 8, 12 ஆம் பாவங்கள் எதிர்த்துக் கொண்டே இருக்கும். ஒரு பாவம் வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அந்த பாவத்தின் 6, 8, 12 ஆம் பாவங்கள் அதிலும் குறிப்பாக 12ஆம் பாவம் வீரிய மின்றி இருக்கிறது என்று பொருள்.

ஐந்தாம் பாவம் என்பது பிள்ளைப் பேறு. அதற்கு 12ஆம் பாவம் நான்காம் பாவம். ஒரு ஜாதகத்தில் நான்காம் பாவம் அதீத பலத்தோடு இருந்து ஐந்தாம் பாவம் பலம் குறைவாக இருந்தால் ஐந்தாம் பாவத்துக்கு கிடைக்க வேண்டிய அத்தனை காரகங்களையும் நான்காம் பாவம் தடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நான்காம் பாவம் வலுவடைந்தவர்களுக்கு நல்ல படிப்பு இருக்கும். வீடு வாசல் முதலிய சொத்து பத்துக்கள் இருக்கும். இவைகள் எல்லாம் வளமாக இருக்கிறது என்று சொன்னால் நான்காம் பாவம் பலமாக இருக்கிறது என்று பொருள். இந்த நான்காம் பாவம், ஐந்தாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமல்லவா! அப்படியானால் ஐந்தாம் பாவத்தின் நன்மைகளை இந்த நான்காம் பாவம் தடுப்பதை நாம் காணலாம்.

அதனால்தான் நல்ல குடும்பம், சொந்த வீடு, சொத்து பத்து இருக்கக்கூடிய ஒரு சிலருக்கு ஐந்தாம் பாவத்தின் காரகத்துவமான குழந்தைச் செல்வம் கிடைப்பது தாமதப்படுகிறது அல்லது கிடைப்பது இல்லை. லக்னத்தின் 12ஆம் பாவம் என்பது இந்த ஐந்தாம் பாவத்தின் எட்டாம் பாவமாக அமையும்.

இந்த 12ஆம் பாவம் பலமடைந்து இருந்தால் நல்ல தூக்கம் இருக்கும் இரண்டாவது தொழில் இருக்கும். வெளிநாட்டு யோகம் இருக்கும் எல்லாம் இருக்கும். ஆனால் அது ஐந்தாம் பாவத்தின் காரகத்துவத்தை தடுக்கும். இவர்களுக்கு மனதில் நிம்மதி இருக்காது அல்லது குழந்தைச் செல்வம் இருக்காது அல்லது அன்பு, காதல் போன்ற மெல்லிய உணர்வுகள் இருக்காது. எதற்கெடுத்தாலும் கடினமாகவே பேசுவார்கள். கடினமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் ஐந்தாம் பாவம் கெட்டு, 5ஆம் பாவத்தின் எட்டாம் பாவமான 12ஆம் பாவம் வளர்ந்திருக்கிறது என்று பொருள்.

அதைப்போலவே பத்தாம் பாவம் தொழில் பாவம் அது மிகச் சிறப்பாக சிலருக்கு இருக்கும். 24 மணி நேரமும் தொழிலில் கவனமாக இருப்பார்கள். பறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த தொழில் பாவத்துக்கு எட்டாம் பாவமாக ஐந்தாம் பாவம் அமைகிறது அல்லது ஐந்தாம் பாவத்தின் ஆறாம் பாவமாக தொழில் பாவம் அமைகிறது. எனவே தொழில் பாவத்தின் அமைப்பு ஐந்தாம் பாவமாகிய அன்பு, ஜாலியாக சிரித்தபடி பேசுதல், முதலிய காரகங்களைத் தடுக்கும்.

நீங்கள் பார்க்கலாம் பலர் தொழில், வருமானம் என்று ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவற்றையெல்லாம் முடித்துவிட்டு குடும்பத்தைப் பார்க்கின்ற பொழுது குடும்பத்தின் பல விஷயங்களை இழந்திருப்பார்கள். பிள்ளைகளோடு பேசுதல், பிள்ளைகளின் வளர்ச்சி போன்றவற்றை இழந்திருப்பார்கள். சிலருக்கு பிள்ளை பேறே இருக்காது காரணம் தொழில் பயணம் என்று சுற்றிக் கொண்டே இருப்பவர்களால் வீட்டில் மனைவியோடு எப்படி அன்போடு இருக்க முடியும்? அந்த அன்பும் அதற்கான நேரம் ஒதுக்காததால் இவர்களுக்கு லௌகீகமான இல்லற சுகம், அந்த சுகத்தின் விளைவான பிள்ளை பேறு முதலியவை தாமதமாகும். அமையாது. அமைந்தாலும் அந்த பிள்ளையிடம் ஒரு இரண்டு மணி நேரம் செலவு செய்யக் கூட நேரம் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் தொழிலில் பெரிய ஆளாக இருப்பார்கள். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இந்த பத்தாம் பாவம் என்பது ஐந்தாம் பாவத்தை மட்டும் கெடுக்காது பல ஒற்றைப்படை பாவங்களைக் கெடுக்கும். எப்படிக் கெடுக்கும்? இதை எப்படிச்
சரி செய்வது? பார்ப்போம்.

The post பாதகங்களை சாதகங்களாக மாற்றிக்கொள்ளுங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்