×

தம்பதிகள் குறை தீர்க்கும் பொன்மலை பெருமாள்!

நன்றி குங்குமம் தோழி

நாம் எவ்வளவோ மலைகளைப் பார்த்திருப்போம். ஆனால், சூரிய ஒளியில் பொன்னாக ஜொலிக்கும் மலை என்றால் இந்த பொன்மலை மட்டுமே. அதனாலே அந்த ஊரின் பெயரும் அதுவாகவே ஆனது. இந்தப் பொன்மலைக்கு ஒரு தல வரலாறு உண்டு. நாகார்ஜுன முனிவர் இந்திரன் சபையை அலங்கரித்த முனிவர்களுள் ஒருவர். காளி பக்தர். ஒருநாள் ரதி தேவியை கண்ட முனிவர் அவள் அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்திருந்தார். பார்வதி தேவி முனிவரை அழைக்க ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் அந்த அழைப்பு விழவில்லை. கோபம் கொண்ட தேவி ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.

சாபப்படி இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்திருந்த முனிவர், தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய்வாயாக. சாபவிமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது. அதன்படி தேடிவந்த முனிவர் இந்த மலையை அடைந்தார். தவம் செய்ய தொடங்கினார்.

கூடவே யாகம் நடத்தவும் விருப்பம் கொண்டார். அவ்வாறு யாகம் நடத்த அவருக்குப் பொன் தேவைப்பட்டது. உடனே மகாலட்சுமியை வேண்டினார். மகாலட்சுமியும் அசரீரியாக அவர் வேண்டியபடியே அருள்வதாகக் குறிப்பிட்டாள்.

ஆனால், பொன் கிடைக்க தாமதமானது. முனிவருக்குத் தவிப்பு அதிகரித்தது. என்ன செய்வது என்று புரியாத அவர், வேறுவழி ஏதும் தெரியாததால் தான் தவம் செய்த மலையில் தலையை மோதிக்கொண்டு உயிர்விட முடிவு செய்தார். மலையில் தலை மோத, பார்வதி காட்சி தந்தாள். ‘‘எனக்கு ஏன் இந்த சோதனை?

யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய?’’ என்று அன்னையிடம் கவலையுடன் குறைபட்டுக் கொண்டார் முனிவர்.‘‘வருந்த வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். அதுவே பொன்னாக மாறிவிடும்’’ என திருவாய் மலர்ந்தருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையிலிருந்து தேவையான பாறைகளைப் பெயர்த்தெடுக்க அவை அப்படியே தங்கமாக மாறின. அதை வைத்து யாகம் இயற்றி சாப விமோசனமும் பெற்றார். முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய பொன்மலை. இன்றும் பொன்னாக ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் தலவிருட்சம் பவழமல்லிகை மரம். நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும் வலது புறம் ஆதிசேஷனும் அருட்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். மத்தியில் பீடமும், கருடாழ்வார் சந்நதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் அருட்பாலிக்கிறார்.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் நான்கு கரங்கள், சங்கு சக்கரம் சுதை ஆகியவற்றைத் தாங்கி, நின்ற கோலத்தில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். கருவறையில் ராமபிரான், விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் காட்சி அளிக்கிறார். பெருமானின் இடதுகரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதாபிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் பாதம் அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருட்பாலிக்கின்றனர்.

ராமநவமியின் போது மூன்று நாட்கள் ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் உபன்யாசம் மற்றும் பஜனைகளும் நடைபெறும். சுமார் 500 பேருக்கு அன்னதானமும் நடைபெறும். பெருமான், சீதாதேவி தம்பதியை வணங்கும் பக்தர்களுக்கு ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் அனைத்தும் விரைந்து தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை ஓங்கவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மனமகிழ்வுடன் வாழவும் பெருமான் அருட்பாலிக்கிறார். மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகள் கண்கவர் வனப்புடன் காட்சி தருகின்றன. இங்கு வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சம் எனவும் இந்த நாகர்களை வழிபட்டால் மும்மூர்த்திகளின் பேரருள் கிட்டும் என்பது ஐதீகம். அடுத்துள்ள மண்டபத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சந்நதி உள்ளது. அனுமத் ஜெயந்தியின்போது இந்த ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு ஆராதனைகள் உண்டு.

பகை அகலவும் விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைப்பேறு உண்டாக வாழைப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

நூறு ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற, அதன்படி ராமபிரான் சீதாபிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அனுமன் சந்நதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சந்நதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையைக் கொண்டு வந்து தொட்டியில் தாலாட்டுகிறார். பிறகு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்து தம்பதியினர், அந்தச் சிலையை வீட்டில் தினசரி பாலபிஷேகம் செய்து, உலர்ந்த பழங்களை நைவேத்யம் செய்து வந்தால், குழந்தைப்பேறு உண்டாகும். இந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜய
ராகவப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் அருகே உள்ள அன்னையையும் தரிசித்து பயன்பெறுகிறார்கள். ஆலயம் காலை 7 முதல் 10 மணி வரையிலும் மாலை 6 முதல் 8 மணிவரையிலும் திறந்திருக்கும்.திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலையில் உள்ளது இந்த ஆலயம். ஆட்டோ வசதியும் உண்டு.

தொகுப்பு: மகி

The post தம்பதிகள் குறை தீர்க்கும் பொன்மலை பெருமாள்! appeared first on Dinakaran.

Tags : Nagarjuna ,Ponmalai ,Dinakaran ,
× RELATED பிரிட்டிஷாரின் துப்பாக்கி சூட்டில்...