×

இரவில் சாப்பிடக் கூடாதவை

இரவு நேரம்! புலவர் ஒருவர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டுவரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், ‘‘வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டுப் பிறகு பேசலாம்’’ என்றார். புலவரோ, ‘‘நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர, சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்’’ என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘‘சரி! வாருங்கள்! உணவு உண்ணலாம்’’ என்று அழைத்துச் சென்றார். புலவர் உண்பதற்காக இலையின் முன்னால் அமர்ந்தார். உண்பதற்காகத் தாமரை இலை போட்டிருந்தார்கள்.இலையைப் பார்த்த புலவர், அதையே பார்த்த படி, என்னவோ சிந்தித்துக்கொண்டிருந்தார். அதற்குள் பரிமாறுவதற்கான உணவுப் பொருட்கள் வந்தன. அவற்றைப் பார்த்தார் புலவர். இஞ்சித் துவையல், சாதம், நெல்லிகாய்ப் பச்சடி, அகத்திக் கீரைப் பொரியல், பாகற்காய்ச் சாம்பார், கத்திரிப்பிஞ்சுக் கூட்டு, தயிர் ஆகியவை இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்த புலவர் சாப்பிடாமல், அமைதியாக எழுந்துவிட்டார். நண்பருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது; ‘‘ஏன்? சாப்பிடாமல் எழுந்துவிட்டீர்களே! காரணம் என்ன?’’ என்று கேட்டார்.புலவர் பதில் சொன்னார்; ‘‘தாமரை இலையில் சாப்பிடக்கூடாது.

தாமரை இலையில் சாப்பிட்டால், அது சூட்டைக் கிளப்பும்; வாதம் உண்டாகும்; அக்னி மாந்தம் உண்டாகும். இது மட்டுமல்ல. செல்வம் போய் வறுமையும் உண்டாகும்’’ என்றார் புலவர். நண்பர் வியந்தார்; ‘‘அப்படியானால் வாழை இலை போடச் சொல்கிறேன். சாப்பிடுங்கள்!’’ என்று சொல்லி, வாழை இலை போட ஏற்பாடு செய்தார். புலவர் தொடர்ந்தார்; ‘‘இலை மட்டுமல்ல; சாப்பிடுவதற்காகத் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களும், இரவில் சாப்பிடக் கூடாதவைகளாக இருக்கின்றன. இப்போது சமைத்திருப்பவைகளில் சாதம் மட்டும்தான், சாப்பிடக்
கூடியதாக உள்ளது’’ என்றார். விவரம் அறிந்த நண்பர், உடனே வாழை இலையைப் போட்டு, ரசமும் சோறுமாகப் புலவரை உண்ணச் செய்தார்.

அன்று முதல் அந்த நண்பர், தாமரை இலையை நீக்கி, இரவில் உண்ணக் கூடாத பொருட்களையும் நீக்கினார். தன் பணியாளர்களும் அதையே பின்பற்றச் செய்தார். இரவில் உண்ணக்கூடாத பொருட்களாகப் புலவர் சொன்னவை, ஜீரணம் – செரிமானம் ஆக நீண்டநேரமாகும். இரவில் அவற்றை உண்டவுடன், வேலை ஏதும் செய்யாமல் படுத்துவிடுவதால், அவை ஜீரணமாக இன்னும் நேரமாகும். அதற்குள் மறுநாள் பொழுது விடிந்து, மேலும் மேலும் உணவை வயிற்றுக்குள் தள்ளுவதால், நோய்கள் அதிகரிக்கும், உடல் நலம் கெடும். பழந்தமிழ் நூல்கள் பலவும் சொல்லும் தகவல்கள் இவை. உணர்வோம்! செயல்படுத்துவோம்! நலம் பெறுவோம்!

தொகுப்பு: V.N.சுந்தரி

The post இரவில் சாப்பிடக் கூடாதவை appeared first on Dinakaran.

Tags : Polavar ,Ayalur ,Pulavaro ,
× RELATED ஒட்டன்சத்திரம் அய்யலூர் சந்தைகளில் ₹4 கோடிக்கு ஆடுகள் விற்பனை