×

தெளிவு பெறுஓம்

குழந்தைகள் கல்வி அறிவு பெற எந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்?
– குருசந்திரன், வந்தவாசி.

பதில்: அறிவு தெய்வம் ஹயக்ரீவரை வணங்கினால் சகல கலைகளும் பாகம்படும். சரஸ்வதி தேவியின் குருவாக ஹயக்ரீவரைச் சொல்வார்கள். காலையில் பூஜை அறையில் குழந்தைகள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தங்கள் பாடத்தைப் படிக்கும் பொழுது, மனதில் நிற்கும். கல்வியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அந்த ஸ்லோகம்:

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் முபாஸ்மஹே’’

? கடவுளைக் காண முடியுமா?
– சந்திரமதி, திண்டுக்கல்.

பதில்: இந்த கேள்வியை பலரும் கேட்கிறார்கள். இந்தச் சந்தேகம் வந்து விட்டாலே கடவுளை காண்பது என்பது இயலாத காரியம் ஆகிவிடும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இது குறித்து ஒரு முறை விளக்கம் அளிக்கும்போது சொன்னார். கடவுளைக் காண முடியுமா என்று எல்லோரும் கேட்கிறார்கள். காண முடியும் என்கின்ற உறுதி அவர்களிடத்தில் இல்லாமல் இருக்கிறது. கடவுளை காண்பது சாத்தியம் இல்லாத விஷயம் என்று முதலிலேயே அவர்கள் முடிவெடுத்து விடுகின்றார்கள்.

அதைவிட இன்னொரு விஷயமும் அவர் சொன்னார். யார் இறைவனை பார்க்க விரும்புகிறார்கள்? எல்லோரும் பணம் பதவி என்று ஏங்குகிறார்களே தவிர கடவுளுக்காக யார் ஏங்குகிறார்கள்? ஒருவன் கடவுளை பார்க்க விரும்புகின்றான் என்று சொன்னால் அந்த ஏக்கம் அவனிடத்தில் இருக்க வேண்டும். அந்த ஏக்கம் நிஜமாக இருக்கிறதா என்கிற கேள்வி எழ வேண்டும். ஆனால் நாம் தினமும் ஒரு பெரிய பட்டியல் வைத்துக்கொண்டு கடவுளிடம் வேண்டு கின்றோம். “உன்னைத் தவிர எதுவும் வேண்டாம்’’ என்று, என்றாவது அவரிடத்திலே கேட்டு இருப்போமா! கடவுளே நேரில் வந்தாலும் அவரை அடைய நினைப்போமா? சந்தேகம்தான் என்கின்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர் இதுதான் உண்மை.

? தவறு செய்பவர்களைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
– விஷ்ணுபிரசாத், புதுச்சேரி.

பதில்: பொதுவாக எல்லோரும் உடனே அந்தத் தவறைச் சுட்டிக்காட்டுவார்கள். அறிவுரை கூறுவார்கள். அதெல்லாம் சரிதான். அதற்கு முன்னால் அந்தத் தவறு உங்களிடமும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், முதலில் அந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்றுதான் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

? தாராளமாக இருப்பது நல்லதா? சிக்கனமாக இருப்பது நல்லதா?
– கணபதி, சென்னை.

பதில்: ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சிக்கனமாகவும் இருக்க வேண்டும். தாராளமாகவும் இருக்க வேண்டும். எதில் தாராளம், எதில் சிக்கனம் என்பது முக்கியம். சிக்கனம் என்பது தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இருப்பது. தாராளம் என்பது அப்படி மிச்சப்படுகின்ற பணத்தை, தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பது. தாராளம் இல்லாத சிக்கனம் பிறர் பொருளின் மீது ஆசையை உண்டாக்கும். சிக்கனம் இல்லாத தாராளம் வீண்பொருள் விரயத்தை ஏற்படுத்தும். எனவே சிக்கனமும் தாராளமும் ஒன்றுக்கொன்று இணைந்தவை
என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

? அஷ்டாங்க விமானம் என்கின்றார்களே, அப்படி என்றால் என்ன?
– ஜெயபிரபா, பெரம்பலூர்.

பதில்: எண் கோணத்தோடு கூடிய விமானத்திற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர். அஷ்டாங்க விமானத்தோடு கூடிய திருக்கோயில்கள் மூன்று. ஒன்று திருக்கோஷ்டியூர், இரண்டாவது மதுரை கூடல் அழகர் கோயில், மூன்றாவது உத்திரமேரூர்.

? ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். மனிதகுலம் திருந்தாதபோது இந்த அறிவுரைகள் அவசியமா?
– அருண், சேலம்.

பதில்: துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரைத் தரிசித்து ஆசி பெற்றுச் சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம். உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில்தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்…?? என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார்.

‘‘தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கேதான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரைவிட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டிவை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டப்பட்டு இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்துவிடு என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி. தினமும் நீ சுத்தப்படுத்தினாலும். இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்…?? என்று கேட்டார். அதற்கு அவன், ‘‘என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கறீங்க…?’’ திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா…?’’

இதைக் கேட்ட துறவி அப்போது சொன்னார், தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத்தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழிப்படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள். இளைஞன் கேட்டான்… சாமி இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன…?

அவர் உடனே அங்கு கட்டியிருந்தகுதிரையை அவிழ்த்துவிட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார். இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா…?
ஆகாது சாமி.. .என்றான். துறவி கூறினார்… உன் கேள்விக்கு இதுதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்… என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டிவிடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமை முடிந்து விடும். அன்று வரை மனிதனை நன்னெறிப் படுத்த வேண்டும் என்றார்.

? இசையைப் பாடி இறைவனை அடைந்தார்கள் என்கிறார்களே, இசைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறதா?
– கோபிகா, ஈரோடு.

பதில்: சில விஷயங்களை சூட்சுமமாக புரிந்து கொள்ள வேண்டும். இசையால் மட்டுமல்ல வேறு வேறு செயல்களைச் செய்தும் இறைவனை அடைந்தவர்கள் உண்டு.ஸ்ரீ ரமணர் ஆஸ்ரமத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஆந்திர மாது அடிக்கடி ஆஸ்ரமம் வந்து தங்கிப்போவது வழக்கம். அவள் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவள்.ஆசிரமத்தில் பகவானுக்கு எதிரில் உட்கார்ந்து பாடுவாள். சில நேரங்களில் வீணையும் வாசிப்பாள்.

அவள் ஒரு நாள் பகவானிடம், `சங்கீதத்தினாலேயே முக்தியடைய முடியுமா அல்லது வேறு சாதனை வேணுமா?’ என்று கேட்டாள். பகவான் பதிலேதும் கூறாமல் மவுனமாக வீற்றிருந்தார். மீண்டும் அவள், `தியாகராஜர் போன்றவர்கள் பாடித்தானே முக்தியடைஞ்சாங்க!’ என்று கேட்டாள். பகவான் நிதானமாக அவளைப்பார்த்து, ‘‘பாடிப் பெறவில்லை, பெற்றதைப் பாடினார்கள். அதனாலேதான் அவர்களோட சங்கீதம் ஜீவனுள்ளதா இருக்கு’’ என்றார்.

? இறந்த பிறகு என்ன நடக்கும்?
– செல்லதுரை, திருச்செங்கோடு.

பதில்: ஒருமுறை சுவாமி வேதாத்திரி மகரிஷியிடம் ஒருவர் கேட்டார். ‘‘செத்த பிறகு என்ன நடக்கிறது?’’ அப்பொழுது வேதாத்திரி மகரிஷி சிரித்துக்கொண்டே சொன்னார்.
‘‘அந்த அனுபவம் இப்போது எனக்கு இல்லை. நான் செத்த பிறகுதானே எனக்குத் தெரியும். அந்த அனுபவம் வரும்போது அங்கே வாருங்கள். நீங்களும் கேளுங்கள். நானும் சொல்கிறேன்.’’ என்றாராம் செத்த பிறகு என்ன நடந்தால் என்ன? அது நமக்குத் தெரியவாபோகிறது. எனவே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. இருக்கும் போது நாம் சரியாக நடந்து கொள்கிறோமா என்பதுதான் நமக்கு முக்கியம்.

? ஏகாதசி, கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?
– ராமநாதன், கொண்டையம் பேட்டை, திருச்சி.

பதில்: விரதம் என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப்
போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு. ராமன், அடைக்கலமானவர்களை காப்பாற்றுவதை தன்னுடைய விரதம் என்று குறிப்பிடுகின்றார். (ததாதி ஏ தத் விரதம் மம) எனவே பகவானை நினைப்பது, அடைய முயற்சிப்பது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி வழிபடுகின்ற முறைதான் விரதம். கடவுளைப் பற்றி நினைக்கின்ற பொழுது நமக்கு உணவு பற்றிய சிந்தனை வராது என்பதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கின்ற முறையை வைத்தார்கள். அதில் ஆரோக்கியத்தையும் இணைத்தார்கள். அதனால் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று உள்ளம் பலப்பட்டது. இரண்டு உணவு உண்ணாமல் ஒரு நாள் உபவாசம் இருந்ததால், உடலும் பலப்பட்டது. இதைவிட வேறு என்ன பயன் வேண்டும்?

? கம்பர் சடகோபர் அந்தாதி என்று ஒரு நூலை எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே? சடகோபர் யார்?
– ஜே.கலையரசன், மன்னார்குடி.

பதில்: நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்று பெயர். கம்பராமாயணத்தை எழுதி அரங்கேற்றம் செய்ய முயற்சித்தபோது சில தடைகள் ஏற்பட்டன. அப்பொழுது பகவானே, ‘‘நம்மைப் பாடினாய், சரி, நம் சடகோபனைப் பாடினாயா?’’ என்று கேட்க, சடகோபராகிய நம்மாழ்வார் மீது அற்புதமான அந்தாதி இயற்றினார். அதை இயற்றி அரங்கேற்றிய பிறகுதான் கம்பனுடைய ராமாயணம் தடையில்லாமல் அரங்கேறியது. நம்மாழ்வாரின் பெருமையையும், அவர் இயற்றிய திருவாய்மொழியின் பெருமையையும் சொல்லும் அதி அற்புதமான நூல் இது. தென் தமிழத்தில் சில ஆலயங்களில் சடகோபர் அந்தாதி சேவிக்கும் வழக்கம் உண்டு.

? பசுவிற்கு அமாவாசை அன்று அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
– ஜி.சி.பாபு, திருப்பதி.

பதில்: அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாடு. நீத்தார் வழிபாட்டின் ஒரு அம்சமாக, பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் அல்லது அது உண்ணுகின்ற தீனி கொடுக்கும் வழக்கம் உண்டு. இது அமாவாசை அன்று மட்டும் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மற்ற நாட் களிலும் கொடுக்கலாம். இறைவனுடைய அருளையும் பெறவும் முன்னோர்களுடைய ஆசியைப் பெறவும் இது முக்கியம்.

? மரணத்தைக் குறித்த அச்சம் வருவதால்தான் மனிதன் தவறு செய்யாமல் இருக்கின்றானா?
– பிந்துமாதவராவ், நங்கநல்லூர் – சென்னை.

பதில்: இப்பொழுது மனிதர்கள் நடந்து கொள்கின்ற முறையைப் பார்த்தால், அவர்கள் மரணத்தைப் பற்றி அச்சப்படுபவர்களாகவா இருக்கிறார்கள்? சந்தோஷமாக வரவேற்பவர்கள் போல அல்லவா நடந்து கொள்கிறார்கள்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.

Tags : Guruchandra ,Vandavasi ,Hayagriva ,Saraswati ,
× RELATED ஞானானந்த மயனாக அருளும் ஹயக்ரீவர்