ஜீயபுரம், ஜூலை 18: அந்தநல்லூர் ஒன்றியம் பெருகமணியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய துறை அலுவலர்களிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. பெருகமணி, திருப்பராய்த்துறை, கொடியாலம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில் நடத்தப்பட்ட முகாமிற்கு ரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி சிவசூரியன், அமுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ரங்கம் ஆர்.டி.ஓ, தாசில்தார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, மின்வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் பட்டா பெயர் மாற்றம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ஓய்வூதியம், கலைஞரின் கனவு இல்லம், மகளிர் உரிமைத்தொகை, காலனி வீடுகள் பராமரிப்பு, வேளாண் கருவிகள், விளை நிலங்களுக்கான மின் இணைப்பு போன்ற 600க்கும் மேற்பட்ட பல்வேறு வகையிலான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் வருவாய்த்துறைக்கு மட்டும் 433 மனுக்கள் வரப்பபெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை ஒன்றிய ஆணையர்கள் ராஜா, வேதவள்ளி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post மக்களுடன் முதல்வர் முகாமில் பெற்ற 600 மனுக்கள் பரிசீலனை appeared first on Dinakaran.