ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் பல்வேறு பகுதிகளிலும் மண் சரிவு, வீடுகளில் விரிசல் மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளிலும் மற்றும் எமரால்டு, இத்தலார் போன்ற பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதிகபட்சமாக அவலாஞ்சியில் 34 செ.மீட்டரும், அப்பர் பவானியில் 22 செ.மீட்டரும், தேவாலாவில் 152 மிமீட்டரும், பந்தலூர் 136 மிமீட்டரும், எம்ரால்டில் 125 மிமீட்டரும் மழை பதிவானது. மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு நடுவே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலாடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலை, அப்பர்பவானி பகுதியில் விடிய, விடிய கொட்டிய மழையால் அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலை ஆகியவற்றில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
பாலாடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண் திட்டு சரிந்து ரோட்டில் விழுந்தது. சாலையோர மின் கம்பங்களும் சாய்ந்தது. உடனடியாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மஞ்சூர் சுற்றிலும் பல இடங்களில் பலத்த மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டது. இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மாயாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தரைப்பாலத்தை வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பிவிடப்பட்டது. ஆற்றை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகளான பாடந்துறை, ஆவயல், குற்றி முச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல், குனில் வயல், இருவயல் பகுதிகளில் மழை வெள்ள நீர் விவசாய நிலங்கள், வீடுகளை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடலூர் நகராட்சி 20வது வார்டு கோக்கால் பகுதியில் தனியார் தொண்டு நிறுவன முதியோர் இல்லம் உள்ளது. மழை காரணமாக முதியோர் இல்லத்தில் ஒரு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் தரைப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள முதியோர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தை ஒட்டியுள்ள காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகள், சாலை மற்றும் நடைபாதைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட விலங்கூர் பகுதியில் உள்ள முஸ்லிம் மதரசா இடிந்து விழுந்து சேதமானது. கன மழை நீடித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதனால் வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post நீலகிரி மாவட்டத்தில் கனமழை; அவலாஞ்சியில் ஒரே நாளில் 34 செ.மீ பதிவு மண் சரிவு, மரங்கள் முறிவு, வீடுகளில் விரிசல் appeared first on Dinakaran.