சென்னை: தொழிற்சாலைகளுக்கான கூடுதல் உயரழுத்த இணைப்பு விண்ணப்பங்களுக்கான ஒப்புதலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள அதிகாரிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. உயரழுத்த மின் இணைப்பை பொறுத்தவரை சராசரி மின் கட்டணத்தின் 2 மடங்கு தொகை நுகர்வோரின் கணக்கில் முன்வைப்புத் தொகையாக இருப்பு வைக்க வேண்டும். கடந்த அக்டோபர் மாதம் உயரழுத்த மின் இணைப்புகளுக்கு எளிதாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் நடைமுறையை மின் வாரியம் அறிமுகப்படுத்தியது. தொழிற்சாலைகளுக்கான கூடுதல் உயரழுத்த இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் மீது தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கள அதிகாரிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் வாரியத்தின் தொழில்நுட்பக் கிளை விண்ணப்பங்களை கள அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் பரிசீலித்து, நிர்வாக ஒப்புதலுக்காக தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் விண்ணப்பம் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் இணைப்பை வழங்க வேண்டும் என அறிவுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உயர் அழுத்த மின் இணைப்புகளால் மின் வாரியத்திற்கு டெபாசிட், தேவை கட்டணங்கள் மற்றும் நுகர்வுக் கட்டணங்கள் வாயிலாக வருவாய் கிடைக்கும். சராசரியாக 1 லட்சத்துக்கும் அதிகமான உயர் அழுத்த மின்நுகர்வோர் உள்ளனர். சில விண்ணப்பதாரர்கள் இணைப்பு கொடுக்க கால தாமதம் செய்வதாக புகார் தெரிவித்தனர். மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பம் பெற்ற வுடன் வணிக பிரிவு தலைமைப் பொறியாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேற்பார்வை பொறியாளர்களின் கூட்டு ஆய்வு 3 நாளில் செய்யப்பட வேண்டும். 4வது நாளில், தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை திட்டமிடல் தலைமை பொறியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்குள், திட்டமிடல் தலைமைப் பொறியாளர் சுமை ஓட்ட ஆய்வு அறிக்கையை அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளருக்கு வழங்க வேண்டும். இறுதி முன்மொழிவை பகிர்மான இயக்குனருக்கு 25 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். 5 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
The post தொழிற்சாலைகளுக்கான கூடுதல் உயரழுத்த இணைப்பு விண்ணப்பங்களுக்கான ஒப்புதலை தாமதமின்றி வழங்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.