கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 62 போலீசார் சாராய வியாபாரிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 67 பேர் பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த போலீசாரை கண்டறிந்து மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் 62 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் வேலூர் சரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் ஒருவர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 31 போலீசாரும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 14 போலீசாரும் வேலூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில போலீசார் அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் சரகத்துக்கு மாற்றப்படுவதற்கான பட்டியல் தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
The post கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரை சேர்ந்த 16 எஸ்ஐ உள்பட 62 போலீசார் வேலூர் சரகத்திற்கு மாற்றம்: சாராய வியாபாரிகளுடன் தொடர்பால் ஐஜி நடவடிக்கை appeared first on Dinakaran.