×
Saravana Stores

ஆர்.கே.பேட்டை அருகே சாலையோர தரைக்கிணறுக்கு தடுப்பு வேலி: கிராம மக்கள் வலியுறுத்தல்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே சாலையை ஒட்டியுள்ள பாழடைந்த தரைக் கிணற்றினால் அதிகளவு வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. இக்கிணற்றை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து தரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய காண்டாபுரம் கிராமத்தில் இருந்து ராஜா நகரம் மேற்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் சாலையோரமாக ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மேலும், ராஜா நகர கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இச்சாலையில் இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. மேலும், காண்டாபுரத்தில் இருந்து ராஜா நகரம் கிராமங்களுக்கு செல்லும் சாலையை ஒட்டி, திறந்தவெளியில் பாழடைந்த தரைக்கிணறு உள்ளது. இதை சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் வளர்ந்துள்ளன. இச்சாலை வழியே இரவு நேரங்களில் அவசர ஆபத்துக்கு வாகனங்களில் வேகமாக செல்பவர்கள், எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் திரும்பும்போது, புதர்களுக்கு இடையே உள்ள பாழடைந்த தரைக்கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

இதனால் சாலையோர கிணற்றினால் வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயநிலை உள்ளது. எனவே, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையோரம் அபாயகர நிலையில் உள்ள தரைக்கிணற்றை சுற்றிலும் தடுப்பு வேலி அமைப்பதற்கும், அங்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தருவதற்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாநகர கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே சாலையோர தரைக்கிணறுக்கு தடுப்பு வேலி: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Kandapuram ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை