சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 6,872 கனஅடியாக இருந்தது. இன்று 20,092 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 74.48 அடியாகவும், நீர் இருப்பு 12.9 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 1105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post நீர்பிடிப்பு பகுதியில்தொடர்ந்து மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது appeared first on Dinakaran.