சென்னை: சென்னை மயிலாப்பூர் மற்றும் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து மர்ம நபர்கள் சிலர் இமெயில் முலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகினறனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என்பது தெரியவந்தது. மத்திய குற்றப்பதிவு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்க கூடிய செட்டிநாடு வித்தியாஷ்ராம் பள்ளிக்கு இமெயில் மூலம் ஓவியா உதயநிதி என்ற பெயரிலிருந்து வெடிகுண்டு மிரட்டலானது இமெயில் மூலமாக வந்துள்ளது. குறிப்பாக இன்று அதிகாலை 1.50 மணி அளவில் இமெயில் வந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம் போல பள்ளி நிர்வாகத்தினர் இமெயிலை சரிபார்க்கும் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். அதே போல் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியான வித்யா மந்திர் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் அதே பெயரில் வந்துள்ளது. அது தொடர்பாகவும் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் பள்ளி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பாக ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னை மயிலாப்பூர் மற்றும் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.