உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 33 செ.மீ அளவில் அதிகனமழை பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 21செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகனமழையை எதிர்கொள்ளவும், பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் 4 பேரிடர் மீட்பு படைகள் நீலகிரி மாவட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் அமைப்பு படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 4 பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேரிடர் காவலர்கள் கொண்ட மொத்தம் 4 பேரிடர் மீட்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் அனைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களுடன் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதிகனமழை எச்சரிக்கை திரும்ப பெறும்வரை அந்த மாவட்டத்தில் இருந்து தேவையான நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் எந்நேரமும் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளையும், மீட்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போடும் கனமழை.. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் முகாம்..!! appeared first on Dinakaran.