×
Saravana Stores

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது: 6 மணி நேர விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைப்பு

கரூர்: ரூ.100 கோடி நில அபரிப்பு வழக்கில் கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் பதுங்கியிருந்த போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கரூர் அழைத்து வரப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம்தேதி புகார் செய்திருந்தார்.

இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். இதுதொடர்பாக சார்பதிவாளர் கொடுத்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் சாலையில் உள்ள என்.எஸ்.ஆர்.நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது சகோதரர் சேகர் வீடு என வழக்கில் தொடர்புடைய 13 நபர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5ம்தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, 2வது முறையாக கடந்த 7ம்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 2 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சென்னையில் அபிராமபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுந்தரம் சாலையில் உள்ள சாய்கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் உள்ள வீடு மற்றும் கரூர் பெரியாண்டாங்கோயில் என்எஸ்ஆர் நகரில் உள்ள விஜயபாஸ்கர் குடியிருந்து வரும் அபார்ட்மெண்ட், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், திருவிக சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் அறக்கட்டளை அலுவலகம், என்எஸ்ஆர் நகரில் உள்ள ஆதரவாளர் ராஜேந்திரன் வீடு, இதே பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் வீடு, சாயப்பட்டறை அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து சிகடந்த 11ம்தேதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பசுபதி செந்தில் உட்பட 14 பேரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தபடி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞர்கள் மூலம் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் சிபிசிஐடி போலீசார், தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கேரளாவுக்கு தப்பியோடினார். இதனையடுத்து விஜயபாஸ்கரை பிடிக்க டிஎஸ்பிக்கள் தலைமையிலான 10 தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர்.

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி ஐஜி அன்புக்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படையினர் திருச்சூரில் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவரை காரில் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பின் கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று இரவு ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரித்த நீதிபதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து கரூர் பஸ் ஸ்டாண்ட், கோர்ட் வளாகம் போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு
நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், மனுதாரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மனுவுக்கு பதில் தர அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது: 6 மணி நேர விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,M.R. Vijayabaskar ,Kerala ,Trichy ,Karur ,Former ,minister ,MR Vijayabaskar ,CBCID ,Dinakaran ,
× RELATED அதிமுகவுக்கு பாதிப்பில்லை சொல்கிறார் ஆர்பி.உதயகுமார்