* குற்றச்செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை
* சென்னை கமிஷனர் அருண் எச்சரிக்கை
சென்னை: சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி உள்ள நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் டிஏஆர்இ மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த 14ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்கள் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான இந்த சிறப்பு சோதனையில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஐயப்பன் (33), ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் டேனியல் ஜோசப் (24) மற்றும் நவீன்குமார் (25), பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அருண் (23), அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கலைமணி (30), சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சஞ்சய் (24), கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நெல்சன் (47) ஆகிய குற்றவாளிகள் உட்பட 77 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதர 4 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். ஆகவே, சென்னை காவல் துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
The post சென்னையில் கடந்த 2 நாட்களில் ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 77 பேர் கைது appeared first on Dinakaran.