பெரம்பலூர், ஜூலை 16: புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி கிராமங்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (15ம் தேதி) திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா நக்கசேலம் அருகே உள்ள சிறுவயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புது விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : எங்கள் சிறுவயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புது விராலிப்பட்டி பழைய விராலிப்பட்டி கிராமங்களில் சுமார் 2000 பேர் வசித்து வருகிறோம். ஒரே பஞ்சாயத்தில் இருக்கும் 3ஊர்களில் ஊராட்சி தலைவர் தனது சொந்த கிராமத்தில், சிறுவயலூர் கிராமத்திற்கு மட்டும் குட்டைவேலை கொடுக்கிறார்.
அதே ஊராட்சிக்கு உட்பட்ட புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி ஆகிய 2 கிராமங்களுக்கும், மத்திய அரசின் தேசியஊரக வேலை (100நாள் வேலை) திட்டப் பணிகளை வழங்கு வதில்லை. எனவே இது தொடர்பாக பரிசீலனை செய்து விரைந்து எங்களுக்கு பணி வழங்க ஆவண செய்ய வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post விராலிப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.