×

ரூ.4,620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.4620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான ஹிஜாவு நிர்வாக இயக்குனரும், 4வது குற்றவாளியுமான சவுந்தரராஜன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 500 நாட்களுக்கு மேல் சவுந்தரராஜன் சிறையில் இருப்பதையும், அவரது உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி, சவுந்தரராஜனுக்கு உடல் நல பிரச்னை என்றால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சவுந்தரராஜனின் மகன் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post ரூ.4,620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijavu ,Chennai ,Hijavu Finance Company ,Economic Offenses Division ,Dinakaran ,
× RELATED சென்னை காசிமேட்டில் தீ விபத்து