கேப் கனாவரல்: சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரமாண்டமான குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். எதிர்காலத்தில் நிலவை ஆய்வை செய்ய விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடுகையில் நிலவில் பகலும் இரவும் 14 நாட்கள் மாறி மாறி வரும். பகலில் வெயில் 106 டிகிரி வரை கொளுத்தும். இரவில் குளிர் மைனஸ் 100 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். இதனால் மனிதர்கள் அங்கு தங்கி ஆய்வு செய்வது இயலாத காரியம். அதிகபட்சமாக கடந்த 1972ல் நாசாவின் அப்பல்லோ 17 விண்கலத்தில் சென்ற வீரர்கள் அதிகபட்சமாக 75 நிமிடங்கள் நிலவில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நிலவில் தற்போது பெரிய அளவிலான குகை இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை இத்தாலி தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. இந்த குகை அப்பல்லோ 11 தரையிறங்கிய இடத்தில் இருந்து வெறும் 250 மைல்கள் (400 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. இந்த குகை மிக ஆழமானது. ரேடார் தரவுகள், குகையின் ஆரம்ப பகுதியை மட்டுமே உறுதிபடுத்தி உள்ளன. இது குறைந்தபட்சம் 130 அடி (40 மீட்டர்) அகலமும், பல்லாயிரக்கணக்கான மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரிய குழியில் ஆய்வாளர்களுக்கான நிரந்தர ஆய்விடம் அமைக்க முடியும். மேலும், நிலத்தை தாங்க முடியாத வெப்பநிலையிலிருந்து, கதிர்வீச்சிலிருந்தும் ஆய்வாளர்களை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற 200க்கும் மேற்பட்ட குகைகள் நிலவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் குகை இருப்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த 50 ஆண்டாக மர்மமாக இருந்து வந்த நிலையில் இந்த தகவல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
The post எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் தங்க நிலவில் பிரமாண்ட குகை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.