×
Saravana Stores

தனியாக வரி விதித்து வசூலித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து சரிவு: புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்; இந்த ஆண்டாவது உயர்த்தப்படுமா?

சென்னை: சுகாதார வரியாக தனியாக வசூலித்த போதும், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்வது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு அமைந்த பிறகு, அரசுக்கு வரி வசூலிக்கும் வழிகள் அதிகரிக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜிஎஸ்டியில் மாநில அரசுகளுக்கு நேரடி வருவாய் கிடைக்கச் செய்த வரிகள் ஒன்றிணைக்கப்பட்டதால், மாநில அரசின் வருவாய் கேள்விக்குறியானது. பல்வேறு செலவினங்களுக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

போதாக்குறைக்கு, கூடுதல் செலவினங்களுக்கு புதிய வரிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் 2018ம் ஆண்டு சுகாதார வரியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில், சுகாதாரம் மற்றும் கல்விக்காக 4 சதவீத செஸ் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஏழை மக்கள், ஊரக பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார வசதிகளை மேம்படுத்த உதவும் திட்டங்களுக்கு செலவிட இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், சுகாதாரத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகமாக இருப்பது போல் தோன்றினாலும், மொத்த பட்ஜெட் மற்றும் ஜிடிபியில் கணக்கிடும்போது மிகக் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் சுகாதாரத்துக்காக ஒன்றிய அரசு ரூ.56,236 கோடி ஒதுக்கீடு செய்தது. சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் சுகாதார ஆய்வு மற்றும் ஆயுஷ் திட்டங்களுக்கு இந்த நிதி அடங்கும். ஆனால், இது மொத்த பட்ஜெட்டில் 2.4 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மறு மதிப்பீட்டின்படி 1.9 சதவீதமாக குறைந்து விட்டது. இதுபோல், நாட்டின் ஜிடிபியில் 2018-19ல் ஒதுக்கப்பட்ட சுகாதார செலவினங்களுக்கான நிதி 0.3 சதவீதமாக இருந்தது. 2023-24 பட்ஜெட் மறு மதிப்பீட்டின்படி 0.28 சதவீதமாக மட்டுமே உள்ளது.

பண வீக்கத்திற்கேற்ப நிதி உயர்த்தப்பட்டாலும், மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் கணக்கிடுவதால் மிக சொற்ப அளவே நிதி உயர்ந்திருக்கிறது. அதாவது, 2019-20 நிதியாண்டில் சுகாதாரத்துக்கு ரூ.66,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மொத்த பட்ஜெட் செலவில் 2.5 சதவீதம். ஜிடிபியில் 0.33 சதவீதம் தான். அடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து சுகாதார நிதி சரிந்து விட்டது. உதாரணமாக 2020-21 நிதியாண்டில் ரூ.82,820 கோடி (மொத்த பட்ஜெட்டில் 2.4 %), 2021-22ல் ரூ.86,830 கோடி (2.3%), 2022-23ல் ரூ.78,179 கோடி (1.9%), 2023-24 மறு மதிப்பீட்டில் ரூ.83,418 கோடி (1.9%) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து வந்துள்ளது. கல்வி, சுகாதார வரி என தனியாக வசூலிக்கப்படும் நிலையில் இது போதுமானதுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த ஆண்டாவது அதிகமாக சுகாதார திட்டத்துக்கு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136பி பிரிவின் கீழ் சுகாதாரத்தின் பங்காக காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை (பிரதம மந்திரி சுகாதார பாதுகாப்பு நிதி) உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.

அதாவது சுகாதாரத்துக்கான ஒன்றை தொகுப்பு வைப்பு நிதி உருவாக்கப்பட்டு சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரி மூலம் கிடைக்கும் நிதியில் சுகாதார வரி பங்கு, பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால், உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நிதி அதற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், நிதி ஒதுக்கீட்டுக்கான கணக்கீடு இறுதியாகாததால் முழுமையாக நிதி சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு சென்று சேர்வதில்லை என சிஏஜி அறிக்கை சுட்டிகாட்டியிருக்கிறது.

உதாரணமாக 2021-22 நிதியாண்டில் , குறிப்பிட்ட சில திட்டங்கள், செலவினங்களுக்காக வசூலிக்கப்பட்ட நிதி இருப்பு ரூ.23,874.85 கோடி. இந்த ஆண்டில் கல்வி சுகாதார நிதியாக ரூ.52,732 கோடி வசூலானது. இதில் 60 சதவீதம் அதாவது ரூ.31,788 கோடி தொடக்கக் கல்வி நிதியில் சேர்க்கப்பட்டது. இடைநிலை மற்றும் உயர் கல்வி நிதியத்தில் ரூ.25,000 கோடி, பிரதம மந்திரி சுகாதார பாதுகாப்பு நிதியில் ரூ.21,499 சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில், திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாத சிறப்பு நிதி பொது நிதியில் சேர்க்கப்பட்டு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த நிதி மற்ற செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே, கணக்கீடு இறுதி செய்த பிறகே வரியை விதிக்க வேண்டும் என சிஏஜி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோறும் பட்ஜெட்டில்
சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீடு
நிதியாண்டு ஒதுக்கீடு பட்ஜெட்டில்
சதவீதம்
2018-19 ரூ.56,236 கோடி 2.4%
2019-20 ரூ.66,042 கோடி 2.5%
2020-21 ரூ.82,820 கோடி 2.4%
2021-22 ரூ.86,830 கோடி 2.3%
2022-23 ரூ.78,179 கோடி 1.9%
2023-24 ரூ.83,418 கோடி 1.9%

* வரியை சேர்த்தால் ஒதுக்கீடு சொற்பம் தான்
பண வீக்கத்துக்கு ஏற்ப சுகாதார செலவுகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க, சுகாதார வரி வசூல் அளவை சேர்த்தால், ஒதுக்கீடு மிகவும் சொற்பம் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக கடந்த 2022-23 நிதியாண்டில் ஒன்றிய அரசு சுகாதார வரியாக ரூ.18,300 கோடியை வசூலித்துள்ளது. அந்த ஆண்டு, சுகாதார செலவுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.78,179 கோடி. இதில் வரியை கழித்து விட்டால் உண்மையான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.59,879 மட்டும் தான். 2018-19 நிதியாண்டில் மொத்த பட்ஜெட் செலவில் 2.4 சதவீதத்தை ஒன்றிய அரசு ஒதுக்கியது. ஆண்டு தோறும் இதே அளவை கணக்காக வைத்து ஒதுக்கீடு செய்திருந்தால் கூட 2023-24 நிதியாண்டில் ரூ.1.07 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்க வேண்டும். அல்லது ஒதுக்கீடு செய்ததில் குறைந்த பட்சம் செஸ் வரியை தனியாக சேர்த்திருந்தால் சுமார்ரூ.83,400 கோடியாவது வந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

The post தனியாக வரி விதித்து வசூலித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து சரிவு: புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்; இந்த ஆண்டாவது உயர்த்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Union government ,Union BJP government ,Narendra Modi ,
× RELATED 3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை...