- அண்ணாமலை
- ஆருத்ரன்
- தர்மபுரி
- பாஜக
- ஜனாதிபதி
- ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட்
- சென்னை
- ஆருத்ரன் அண்ணாமலை
தர்மபுரி: தர்மபுரியில் கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு ஆருத்ரன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பெயர் சூட்டியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு, ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளைகள் திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கியது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தது. இதை நம்பி, அந்த நிறுவனத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,500 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால் விளம்பரம் செய்தபடி, ஆருத்ரா நிறுவனம் நடக்காமல் மோசடியில் ஈடுபட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்டோர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதன் பேரில், 11பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் சிக்கிய ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஹரீஷ். இவர் பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில், மாநில செயலாளர் பொறுப்பில் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், கட்சியில் மாநில பொறுப்பை பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய பணத்தில் இருந்து, பலருக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தார். இதே போல், மோசடி வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் நடிகரும், தயாரிப்பாளரும் பாஜ ஓபிசி பிரிவு மாநில செயலாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இது ஒருபுறமிருக்க, பாஜவில் இருந்து வெளியேறிய மாநில நிர்வாகியான கிருஷ்ணபிரபு என்பவர், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள், மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி ஆருத்ரா நிறுவன மோசடி குறித்து, பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு ‘ஆருத்ரன்’ என்று அண்ணாமலை பெயர் வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பாஜ மீனவரணி மாநில செயலாளர் மூர்த்தியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று மதியம் பென்னாகரத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பென்னாகரம் கிழக்கு மண்டல பாஜ தலைவர் நோன்பரசுவின் குழந்தைக்கு ஆருத்ரன் என்று பெயர் சூட்டினார். இந்த பெயரை கேட்டதும் நிர்வாகிகள் ஒரு கணம் திகைத்தனர். நம்ம கட்சியின் பெயரை கடுமையாக டேமேஜ் செய்ததே இந்த ஆருத்ரா என்ற பெயர் தான். அதை மறக்கமுடியாமல் தலைவர் குழந்தைக்கு ஆருத்ரன் என்று பெயர் வைக்கிறாரோ என்று கட்சியினர் குழம்பினர். அது சரி அண்ணாமலையையும், ஆருத்ரா என்ற பெயரையும் பிரிக்க முடியாது போல என்று சிலர் கிசுகிசுத்தபடி சென்றனர்.
The post கட்சியை டேமேஜ் ஆக்கியது ஆருத்ரா மோசடி குழந்தைக்கு ஆருத்ரன் என்று பெயர் சூட்டிய அண்ணாமலை: நிர்வாகிகள் அதிர்ச்சி; வெடித்தது புதிய சர்ச்சை appeared first on Dinakaran.