- டிரம்ப்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- பிடன்
- மில்வாக்கி
- எங்களுக்கு
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- ஜனாதிபதி ஜோ பிடென்
- தின மலர்
மில்வாக்கி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சிக்குப் பிறகு தேர்தல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு இருக்கும் நெருக்கடிகள் மேலும் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 20 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இனி அதிபர் தேர்தல் பிரசாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் விவாதமாகி உள்ளது.
உண்மையிலேயே, டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு பயங்கரமான சம்பவமாக இருந்தாலும், அமெரிக்க தேர்தல் அரசியலில் இது ஒன்றும் புதிது கிடையாது. அமெரிக்க அரசியல் எப்போதுமே ரத்தக்களரி சண்டையாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே பலமுறை அதிபர் வேட்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. 4 அதிபர்கள் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, அதிபர் தேர்தல் பிரசாரத்தில் நடந்திருக்கும் இந்த துப்பாக்கி சூடு அமெரிக்க மக்கள் மத்தியில் பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தாது. முந்தைய காலங்களில் இத்தகைய துப்பாக்கி சூட்டை அந்தந்த காலகட்டத்தில் இருந்த தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்லை.
ஆனால் இப்போது அதுபோல டிரம்ப் தனக்கு நேர்ந்த ஆபத்தை அரசியலாக்காமல் மக்கள் நலன் சார்ந்து பிரசாரத்தை முன்னெடுப்பாரா என்பது பெரும் சந்தேகம். ஏற்கனவே, அமெரிக்க அரசியல் சாக்கடையாகி விட்டது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இருதரப்பிலும் பிரிவினைவாத மற்றும் தீவிர அரசியல் பிரச்சாரங்கள் வழக்கமாகிவிட்டன. மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதை விட மற்ற கட்சியின் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டப்படுகிறார்கள். பிரசாரத்தில் மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன.
அந்த வகையில், துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப்பிறகு முகத்தில் ரத்தக் கறையுடன் முஷ்டியை தூக்கி ‘போராடுங்கள்’ என்ற டிரம்ப்பின் புகைப்படம் இனி பிரசாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பே, பைடன் வயது மூப்பு காரணமாக தேர்தலில் தோற்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டின. இப்போது இது இன்னும் கடினமாக இருக்கும். துணை அதிபர் கமலா ஹாரிஸ் அல்லது வேறு யாரையாவது அதிபர் வேட்பாளராக நிறுத்த ஆளும் ஜனநாயக கட்சிகள் குரல்கள் வலுப் பெறும். அதே சமயம் குடியரசு கட்சியினருக்கு டிரம்ப்பை தைரியமான தலைவராக முன்னிறுத்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரிய வாய்ப்பை தந்துள்ளது.
* இறந்து விட்டேன் என நினைத்தேன்
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு மில்வாக்கியில் நடக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘துப்பாக்கி சூடு நடந்ததும் நான் செத்துவிட்டேன் என்றே நினைத்தேன். இதில் நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் நான் சரியான நேரத்தில் சரியான திசையில் சரியான அளவு முகத்தை திருப்பியிருக்கிறேன். அதனால்தான் தோட்டா என் காதை கிழித்துக் கொண்டு சென்றதோடு உயிர் தப்பினேன். இதில் ஒரு நொடி தவறியிருந்தாலும் என் உயிர் போயிருக்கும். இந்த சம்பவத்திற்குப் பிறகு அதிபர் பைடன் என்னிடம் நலம் விசாரித்தார். அதை வரவேற்கிறேன். இனி எங்களுக்கு இடையேயான தேர்தல் களம் இன்னும் அதிகளவில் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும்’’ என்றார். இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனி நபராக இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இந்த விவகாரத்தை உள்நாட்டு தீவிரவாத செயலாக விசாரித்து வருவதாகவும் எப்பிஐ தெரிவித்துள்ளது.
The post டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த கட்சிக்கு சாதகமாகும்? பைடனுக்கு மேலும் நெருக்கடி அதிகரிப்பு appeared first on Dinakaran.