சென்னை: கல்வி வள்ளல் காமராசரின் 122 ஆவது பிறந்த நாள் இன்று (15.7.2024) ‘தகுதி திறமை’ என்ற பித்தலாட்டத்தின் முகமூடியைக் கிழித்து கல்விப் புரட்சி செய்த காமராசர் பிறந்த நாளில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பை நாடு தழுவிய இயக்கமாக்கும் உறுதியை ஏற்போம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இளம்பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பள்ளிக் கூடங்களில் அரை நேரம் படித்தால் போதும், மற்ற அரை நேரம் அவரவரின் குலத்தொழிலையே – அவரவர் அப்பன் தொழிலையே கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியார் ஆட்சியை அகற்றப் பெரும் அறப்போர் நடத்தினார் தந்தை பெரியார்! மக்கள் எதிர்ப்பு அதனால் சூறாவளியானது!!
கல்விப் புரட்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர்
வேறு வழியின்றி ஆச்சாரியார் பதவி விலகிய நிலையில், காமராசர் பதவியேற்று, முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்து, ஆச்சாரியார் மூடிய 6,000 கிராமப் பள்ளிகளையும், மேலும் 12 ஆயிரம் புதிய பள்ளிகளையும் திறந்தார். தந்தை பெரியார் அறிவுரைப்படி திறக்க ஆணையிட்டு, பள்ளிகளில் பகல் உணவுத் திட்டம், இலவசக் கல்வி எட்டாம் வகுப்புவரை என்று தொடங்கி, ஒரு கல்விப் புரட்சியின் புதிய சகாப்தத்தை காமராசர் தமது ஆட்சியி்ல உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் வந்த முந்தைய நீதிக்கட்சியின் வாரிசான திராவிட இயக்க ஆட்சி கல்வி வளர்ச்சியைத் தொடர்ந்தது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெருமை இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கிறது!
அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த நமது கலைஞர், மக்களின் நன்றி உணர்வினைக் காட்டி, கல்வி நாளாக காமராசர் பிறந்த நாளை அறிவித்து, அதற்காக தனி ஒரு சட்டத்தையே கொணர்ந்து சாதனை செய்தார்.
‘‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!”
இன்றைய ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், மதிய உணவோடு சேர்த்து, காலைச் சிற்றுண்டியையும் ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளுக்குக் கொடுத்து மாணவர்களை ஊட்டச்சத்தோடு மகிழ்விக்கும் ‘‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” செயற்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் வருகைப் பதிவையும் பெருகச் செய்தார். இத்திட்டம் பெரும் பாராட்டுதலுக்கும், மற்றவர்கள் பின்பற்றும் மாடல் திட்டமாகி உலகெங்கும் வரவேற்பைப் பெற்றது.
ஆட்சி மகுடத்தில் மற்றொரு முத்து!
இன்றுமுதல் அத்திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல; அரசு உதவி பெறும் (Aided Elementary) பள்ளிகளிலும் விரிவாக்கப்படுகிறது என்பது மிகவும் பாராட்டி, வரவேற்கப்படும் ஒன்று.நமது முதலமைச்சர் அவர்களது ஆட்சி மகுடத்தில் மற்றொரு முத்து ஆகும்! காமராசரைப் பட்டப் பகலில், டில்லியில், அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவரைக் கொல்ல முயற்சித்த ஓர் அமைப்பு – இன்று ‘‘கும்பலில் கோவிந்தா” போடுவதுபோல, காமராசர் புகழ் பாடி ‘நடிப்புச் சுதேசி்களாக‘ தங்களைக் காட்டும் கூத்தும் உள்ளது! காமராசர் பிறந்த நாளில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பை நாடு தழுவிய இயக்கமாக்க உறுதியேற்போம்! என்றாலும், காமராசர், ‘தகுதி திறமை’ என்ற பித்தலாட்டத்தின் முகமூடியைக் கிழித்தவர்; சாதனை சரித்திரம் படைத்தவர்; நீட் இன்று படமெடுத்தாடுகிறது; காமராசர் பிறந்த நாளில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பை நாடு தழுவிய இயக்கமாக்கும் உறுதியை ஏற்போமாக! வாழ்க காமராசரின் புகழ்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
The post காமராஜர் பிறந்தநாளில் நீட் தேர்வு ஒழிப்பை நாடு தழுவிய இயக்கமாக்கும் உறுதியை ஏற்போம்: கி.வீரமணி appeared first on Dinakaran.