×
Saravana Stores

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும்: சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல்

மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து ஒருவாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரையைச் சுற்றிலும் சுங்கச்சாவடிகள் எல்லா நான்கு வழிச்சாலையிலும் இருக்கிறது. இதில் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. உள்ளூர் மக்களான மதுரை திருமங்கலம் டி கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் இந்த சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு கடந்த 2 ஆம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, உள்ளூர் மக்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் வாகனங்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்குதரக் கோரி நடந்த போராட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

கப்பலூர் சுங்கச்சாவடி:அடுத்த வாரம் மீண்டும் பேச்சு

கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் வாகன விலக்கு விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலை செயலருடன் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சுங்கச்சாவடியில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் உள்ளோரின் வாகன விவரம்தர அறிவுறுத்தியதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

The post கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும்: சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kepilur ,Tollbooth ,Madurai ,Tirumangalam Keppur ,toll ,Kanyakumari ,Tirumangalam ,Keppur ,toll booth ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த...