×
Saravana Stores

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: காதை துளைத்து சென்றது தோட்டா காயத்துடன் உயிர் தப்பினார்

* குற்றவாளி சுட்டு கொலை; ஒருவர் பலி, உலக தலைவர்கள் கடும் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தோட்டா அவரது காதை துளைத்துச் சென்றதால் ரத்த காயத்துடன் தப்பினார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. மில்வாக்கியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார்.

இதற்கு முன்பாக பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் டவுனில் நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் (78) பங்கேற்றார். அவரது மேடையை சுற்றி பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில ரவுண்டுகள் சுடப்பட்ட சத்தம் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்த சமயத்தில் ஒரு தோட்டா டிரம்ப்பின் வலது காதை துளைத்துக் கொண்டு சென்றது.

உடனடியாக டிரம்ப் காதை பிடித்துக் கீழே குனிந்தார். இதனால் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது பாதுகாப்புக்காக வந்திருந்த ரகசிய சேவை ஏஜென்ட்கள் டிரம்ப்பை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையம் அமைத்தனர். பின்னர் டிரம்ப்பை பாதுகாப்புடன் மேடையிலிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பார்த்து, ‘போராடுங்கள்’ என முஷ்டியை உயர்த்தி ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி, காதில் ரத்தம் வழிய வழிய வெளியேறினார்.

காரில் ஏற்றப்பட்ட அவர் பிட்ஸ்பர்ககில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரசார மேடை போர்க்களமாக மாறியது. துப்பாக்கி சூடு சம்பவத்தால் பீதி அடைந்த பலரும் சம்பவ இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, டிரம்ப்பின் ரகசிய சேவை ஏஜென்ட்டுகள் பதில் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அதோடு, இந்த சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். எப்பிஐ மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

எப்பிஐ ரகசிய ஏஜென்ட் கெவின் ரோஜக் அளித்த பேட்டியில், ‘‘துப்பாக்கி சூடு நடத்திய நபர் பலமுறை துப்பாக்கியால் சுட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சம்பவம் நடந்த சமயத்தில் ரகசிய சேவை ஏஜென்ட்கள் அங்கு இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தகவல்களை பெற்று விசாரிக்கிறோம். இன்னும் படுகொலை முயற்சிக்கான காரணம் கண்டறியப்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபர் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டா குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அவர் எவ்வாறு ஆயுதங்களுடன் பிரசார மேடைப் பகுதிக்கு வந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் நடந்து வருகின்றன’’ என்றார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் 200 முதல் 300 அடி தூரத்தில் இருந்து உயரமான கொட்டகையின் மீது ஏஆர் ரக துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிபர் ஜோ பைடன், டிரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக பேசி நலம் விசாரித்துள்ளார். அதோடு பென்சில்வேனியா மற்றும் பட்லர் நகர மேயர்களுடனும் பைடன் பேசி சம்பவம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்துள்ளார்.

தனது சொந்த ஊரான டெலாவர் செல்லும் பயணத்தை ரத்து செய்து விட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிய அதிபர் பைடன் கூறுகையில், ‘‘இந்த படுகொலை முயற்சியை அனைவரும் கண்டிக்க வேண்டும். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறை எண்ணம் கேள்விப்படாதது’’ என்றார். இதே போல, துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் கூறுகையில், ‘‘டிரம்ப் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் காயமடையவில்லை. அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்’’ என்றார். டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்பும் வெளியிட்ட அறிக்கையில், ‘‘என் தந்தைக்காகவும், பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும் உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி.

விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என்றும் நன்றி உள்ளவாக இருப்பேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். உங்களை எப்போதும் நேசிக்கிறேன் அப்பா’’ என கூறி உள்ளார். இதே போல, டிரம்ப் மீதான தாக்குதலுக்கு குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டிரம்ப் தற்போது நலமுடன் வீடு திரும்பி விட்டதாகவும், மில்வாக்கியில் நடக்கும் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் நேரில் கலந்து கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவரது பிரசாரக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அமெரிக்க ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம்
சிகாகோவில் இந்திய அமெரிக்க சமூகத் தலைவர் பாரத் பராய் அளித்த பேட்டியில், ‘‘அதிபர் டிரம்ப்பின் படுகொலை முயற்சி மிகவும் வருத்தமளிக்கிறது. இது ஜனநாயகத்தில் யாரும் விரும்பாத வன்முறை. மக்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல்வேறு அரசியல் பார்வைகள் உள்ளன. நிச்சயமாக அவை வாக்குப்பெட்டி மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் எதிரியை கொல்வது சரியானது என நினைக்கும் இத்தகைய தீவிர வெறுப்பு முற்றிலும் கண்டிக்கத்தக்கது’’ என்றார். சீக்கிய அமெரிக்கர்கள் தலைவர் ஜெஸ்திப் சிங் ஜஸ்ஸி கூறுகையில், ‘‘அமெரிக்க ஜனநாயகத்தில் இது இருண்ட அத்தியாயம்’’ என்றார். இதே போல பல இந்திய அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்
துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த நபரின் வாகனம் மற்றும் வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
நடந்த சம்பவம் குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘நம் நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது நம்பமுடியாதது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை, அவர் இறந்துவிட்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்தேன். உடனே, என் வலது காது மேல் பகுதியில் தோட்டா துளைத்துக் கொண்டு சென்றது. அப்போதுதான் நான் சுடப்பட்டேன் என்பதை அறிந்தேன். தோளில் ரத்தம் வழிந்தது. அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ என விவரித்துள்ளார்.

* நேரலையில் ஒளிபரப்பு
துப்பாக்கி சூடு நடந்த போது, பல செய்தி சேனல்கள் டிரம்ப் பிரசாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தன. அப்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவமும் நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் பீதியை கிளப்பியது. டிரம்ப் காதை தோட்டா கிழித்துச் செல்வதும் ரத்தத்துடன் அவர் கீழே குனிவதுமான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

* 6.02 மணிக்கு வந்தார்: 6.15க்கு சுடப்பட்டார்
டிரம்ப்பின் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட ரகசிய சேவை ஏஜென்ட் விடுத்துள்ள அறிக்கையில், ‘பிரச்சார கூட்டத்திற்கு டிரம்ப் சரியாக மாலை 6.02க்கு வந்தார். அவர் பேசியக் கொண்டிருந்த போது சுமார் 6.15 மணி அளவில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே, உயரமான இடத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய நபர் மேடையை நோக்கி சுட்டார். சுமார் 5 ரவுண்டுகள் சுடப்பட்டன. உடனடியாக, ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் இறந்துவிட்டார். அமெரிக்க ரகசிய சேவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தச் சம்பவத்திற்கு விரைவாகப் பதிலளித்தது. முன்னாள் அதிபர் டிரம்ப் பத்திரமாக உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து எப்பிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* மோடி, ராகுல் கண்டனம்
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எனது நண்பரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன’’ என கூறி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் ஆழ்ந்த கவலை அடைகிறேன். இதுபோன்ற செயல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். டிரம்ப் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் ’’ என்றார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தாக்குதல் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்தவொரு ஜனநாயகத்திலும் நாகரீக சமுதாயத்திலும் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை’’ என கூறி உள்ளார். இதுதவிர, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* துப்பாக்கி சூடு நடத்திய 20 வயது இளைஞர்
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது 20 வயதுடைய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என எப்பிஐ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளனர். டிரம்ப் பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து 56 கி.மீ தொலைவில் உள்ள பிட்ஸ்பர்க் புறநகர்ப் பகுதியான பெத்தேல் பூங்காவில் அவர் வசித்து வந்தார். கடந்த 2021 ஜனவரியில் ஜனநாயக கட்சியுடன் இணைந்த அரசியல் நடவடிக்கை குழுவிற்கு தாமஸ் 15 டாலர் நன்கொடை கொடுத்துள்ளார்.

* படுகொலைகளும், கொலை முயற்சியும்
கடந்த 1776ம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாடாக உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை 4 அதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் மீதான தாக்குதல் விவரம்: ஆபிரகாம் லிங்கன், 16வது அதிபர்: அமெரிக்க வரலாற்றில் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் அதிபர். கடந்த 1865ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அதிபர் ஆபிரகாம் லிங்கன் தனது மனைவி மேரி டோட் லிங்கனுடன் வாஷிங்டனில் உள்ள போர்டு தியேட்டரில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஜான் வில்க்ஸ் பூத் என்னும் மேடை நாடக நடிகரால் பின்னால் இருந்து தலையில் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடியது, லிங்கனின் கொலைக்கு காரணமாக இருந்தது. தலைமறைவாக இருந்த கொலையாளி பூத், கடந்த 1865 ஏப்ரல் 26ல் விர்ஜீனியாவின் பவுலிங் கிரீன் அருகே பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜேம்ஸ் கேர்பீல்ட், 20வது அதிபர்: கார்பீல்ட் கடந்த 1881, ஜூலை 2ம் தேதி, பதவியேற்ற 6 மாதங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்ட 2வது அதிபர். வாஷிங்டனில் ரயிலை பிடிப்பதற்காக ரயில் நிலையத்தில் நடந்து சென்ற போது, சார்லஸ் கிட்டோவால் சுடப்பட்டு பல வாரங்கள் வெள்ளை மாளிகையில் சிகிச்சைக்குப் பின் செப்டம்பரில் இறந்தார். கொலையாளி கிட்டோ 1882ம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிலிடப்பட்டார்.

வில்லியம் மெக்கின்லி, 25வது அதிபர்: கடந்த 1901ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நியூயார்க்கில் உரையாற்றிய பிறகு மக்களுடன் கைகுலுக்கிய மெக்கின்லி, மார்பில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார். கொலையாளி லியோன் எப் சோல்கோசுக்கு 1901, அக்டோபர் 29ல் மின்சார நாற்காலி வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜான் எப் கென்னடி, 35 வது அதிபர்: கடந்த 1963ம் ஆண்டு நவம்பரில் தனது மனைவி ஜாக்குலின் கென்னடியுடன் டல்லாசில் வாகன அணிவகுப்பில் பங்கேற்ற போது ஜான் எப் கென்னடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராபர்ட் எப் கென்னடி, அதிபர் வேட்பாளர்: இவர் படுகொலை செய்யப்பட்ட அதிபர் ஜான் எப் கென்னடியின் சகோதரர். நியூயார்க் செனட்டராக இருந்த ராபர்ட் எப் கென்னடி 1968ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தனது வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக் கொன்ற சிர்ஹான் தற்போதும் சிறையில் ஆயுள் கைதியாக இருக்கிறார்.

இவர்களைத் தவிர, பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (32வது அதிபர்), ஹாரி.எஸ்.ட்ரூமேன் (33வது அதிபர்), ஜெரால்ட் போர்டு (38வது அதிபர்), ரொனால்ட் ரீகன் (40வது அதிபர்) , ஜார்ஜ் புஷ் (43வது அதிபர்), தியோடர் ரூஸ்வெல்ட் (அதிபர் வேட்பாளர்), ஜார்ஜ் சி வாலஸ் (அதிபர் வேட்பாளர்) ஆகியோர் கொலை முயற்சியில் இருந்து தப்பியவர்கள் ஆவர்.

The post அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: காதை துளைத்து சென்றது தோட்டா காயத்துடன் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,United States ,WASHINGTON ,PRESIDENT ,US ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரைக்கு இடையே...