மதுரை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மதுரை ஆவின் நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: மதுரை ஆவினில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 1.70 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இது, 2 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட உள்ளது. ஆவின் பால் ஆண்டுதோறும் சீராக, ஒரே விலையில் விற்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதுரையில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ரூ.90 கோடி வரை கால்நடை கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய கடன்களை வழங்கவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இற்காக மதுரையில் மட்டும் 700 பேரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலத்தில் தனியார் பால் பண்ணைகளைவிட ஆவின் நிறுவனம் நாள்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பால் கொள்முதல் 8.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மதுரை ஆவின் கடந்த ஆண்டு ரூ.4.5 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. இந்தாண்டு இதைவிட அதிக லாபம் ஈட்டப்படும். பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்பட்ட வருகிறது.இவ்வாறு கூறினார். பேட்டியின் போது, ஆவின் பொது மேலாளர் சிவகாமி உட்பட பலர் இருந்தனர்.
The post பால் கொள்முதல் 8.5 சதவீதம் வரை உயர்வு; தமிழகத்தில் 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க திட்டம்: பால்வளத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.