×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றியை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை முதல் திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினர்.

ஒவ்வொரு ரவுண்டிலும் திமுக வேட்பாளர் முன்னிலை நிலவரம் வரும்போதும் அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால், காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் களைக்கட்டியிருந்தது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா அறிவாலயத்தின் வெளியே சென்றவர்களுக்கு லட்டு வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் அங்கு கூடியிருந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். மேலும் எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, பூச்சி முருகன், அன்பகம் கலை உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியருப்பன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி எம்பி, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா முகைதீன்,

இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியை அடுத்து அனைத்து மாவட்ட திமுக அலுவலகங்கள் முன்பாக தொண்டர்கள் திரண்டு வந்து பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Vikravandi by ,election ,DMK ,Anna Vidyalaya ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Anniyur Siva ,Vikravandi by-election ,Anna Vidyalaya, Chennai ,M. K. Stalin ,Vikravandi ,
× RELATED அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு...