×
Saravana Stores

ஆனி உத்திர திருக்கல்யாண பிரமோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீவழக்கறுத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: ஆனி உத்திர திருக்கல்யாண பிரமோற்சவத்தை முன்னிட்டு காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நீதிமன்ற வழக்குகளில் வெற்றிதரும் இறைவனாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஆனி உத்திர திருக்கல்யாண பிரமோற்சவம் கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரம் செய்யப்பட்டு ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கும், அம்பிகைக்கும் மாலை மாற்றல் வைபவம் நடந்தது. விழாவில் கோயில் செயல் அலுவலர் சு.வஜ்ஜிரவேலு, தக்கார் ப.முத்துலட்சுமி, ஆய்வாளர் ரா.திலகவதி உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. உற்சவர், மலர் அலங்காரத்தில் தேரில் வீற்றிருந்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 19ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும், மாலையில் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. அதனுடன் விழா நிறைவு பெறுகிறது.

 

The post ஆனி உத்திர திருக்கல்யாண பிரமோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீவழக்கறுத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ani Uttra Thirukkalyana Pramorsavam ,Kanchipuram ,Sripadarakhiswarar ,Temple ,Terotum Kolakalam ,Kanchi Procurator Temple ,Swami ,Lord of Victory ,Kanchipuram Gandhi Road ,Kanchipuram Sriusadishwarar Temple ,Ani Uttra Thirukalyana Pramorsavam ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில்...