திருத்தணி: திருத்தணியில் பெய்த மழையால் மபொசி சாலையில் தேங்கியுள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருத்தணி ரயில் நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள மபொசி சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காந்தி ரோடு வழியாக கடும் அவதியுடன் வாகன ஓட்டிகள் சென்றனர்.
தகவலறிந்து திருத்தணி நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி உத்தரவின்பேரில், இன்று காலை நகராட்சி ஆணையர் அருள் மேற்பார்வையில் ஊழியர்கள், மபொசி சாலையில் தேங்கியிருந்த மழைநீரை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அங்குள்ள தற்காலிக கால்வாயில் தேங்கிய மண் அகற்றப்பட்டு, அதன் வழியே மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதேபோல் சுற்றுவட்டார சாலைகளில் தேங்கிய மழைநீரும் அகற்றப்பட்டன. இதனால் மபொசி சாலையில் வாகன போக்குவரத்து சகஜநிலைக்கு திரும்பியது.
The post திருத்தணியில் பலத்த மழை: சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.