ஐநா: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு எதிராக 99 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்பட 60 நாடுகள் புறக்கணித்தன. உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரைனுக்கு கொடுக்க வேண்டும்.
மேலும் முக்கியமான மின் நிலையங்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை ஐநாவில் உக்ரைன் அறிமுகப்படுத்தியது. இதன் மீது நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, சீனா, வங்கதேசம், பூடான், எகிப்து, நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உட்பட 60 நாடுகள் புறக்கணித்தன.
தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன் பேசிய ஐநாவுக்கான ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலியன்ஸ்கி,‘‘ உண்மை நிலையை பிரதிபலிக்காத ஆவணங்களை ஐநா ஏற்று கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது அரசியல் நோக்கம் கொண்டது. இந்த தீர்மானம் போரை நீடிக்க செய்யும். போருக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கும்’’என்றார்.
* இந்தியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி லியாம் வாஸ்லி கூறுகையில்,‘‘ பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கியமான நாடு. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’என்றார்.
The post ஐநாவில் உக்ரைன் தீர்மானம் 99 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பு: இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.