கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலை நடுவே கம்புகளை போட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி பேராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, தூய்மைப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாக பேரூராட்சி கூட்டங்களில் கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 6வது வார்டு பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்துவருவதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஜிஎன்டி சாலையில் திரண்டு சாலை நடுவே நீண்ட கம்புகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதனிடையே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், பேரூராட்சி ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து எந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் நிலவியது.
The post குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து சாலை நடுவே கம்புகளை போட்டு மறியல்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.