அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களாக அனைத்து காய்கறிகளின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வரத்து குறைவு காரணமாக கேரட்டின் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் வேதனை அடைந்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களாக 600க்கும் மேற்பட்ட வாகனங்களில் 7 ஆயிரம் டன் எடையில் அனைத்து காய்கறிகளின் குறைவான வரத்து நிலவி வருகிறது. எனினும், அனைத்து காய்கறிகளின் விலைகள் சற்றுகூட குறையாமல், ஏற்கெனவே உயர்த்தப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து, இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40க்கும், சின்ன வெங்காயம், பீட்ரூட் ரூ.90க்கும், கேரட், பீன்ஸ் ரூ.80க்கும், காராமணி ரூ.60க்கும், சேனைகிழங்கு ரூ.70க்கும், முருங்கைக்காய் ரூ.110க்கும், சேனைகிழங்கு, காலிபிளவர், பீரக்கங்காய் ரூ.50க்கும், பச்சை மிளகாய் ரூ.45க்கும், பட்டாணி ரூ.200க்கும், இஞ்சி ரூ.150க்கும், பூண்டு ரூ.350க்கும், அவரைக்காய் ரூ.75க்கும், எலுமிச்சம் பழம் ரூ.120க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.160க்கும், தக்காளி, சவ்சவ், முள்ளங்கி, வெண்டைக்காய், கத்திரிக்காய், நூக்கோல் ரூ.50க்கும், கோவைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், ஏற்கெனவே ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட், ஊட்டியில் கடும் மழையினால் வரத்து குறைவு காரணமாக, இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் ரூ.80 என கிடுகிடுவென விலை உயர்ந்தது எனக் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறுமொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களாக வரத்து குறைவு காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
தற்போது ஊட்டியில் கடும் மழை பெய்து வருவதால், இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கேரட் குறைந்தளவில் வந்துள்ளது. இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்த மாதம் அனைத்து காய்கறிகளின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அதன் வியாபாரமும் மந்தநிலையில் உள்ளது. காய்கறி விலை உயர்வு காரணமாக சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். அனைத்து காய்கறிகளும் குறைவான விலையில் வியாபாரிகள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு வழிவகை செய்து தரவேண்டும் என்று முத்துகுமார் தெரிவித்தார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கேரட் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.