குடியாத்தம், ஜூலை 12: வெளி மாநிலங்களில் இருந்து குடியாத்தத்திற்கு காரில் கஞ்சா கடத்தி வந்த கொலை குற்றவாளி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 15 கிலோ கஞ்சா மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீசார் நேற்று அதிகாலை தமிழக- ஆந்திர எல்லையான சைனகுண்டா பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 2 கத்திகள் மற்றும் கஞ்சா இருந்தன. உடனே போலீசார், காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குடியரசன்(25), சேங்குன்றம் கோகுல்(26), குமுடிபட்டி மாதேஷ்(20) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரம்பலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(27) என்பது தெரியவந்தது.
இதில், குடியரசன் கடந்த ஆண்டு குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும், தற்காப்புக்காகவும், கஞ்சா விற்பனைக்கு இடையூறாக யாராவது வந்தால் தாக்குவதற்கும் கத்திகளை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா, கார் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து குடியரசன் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காரில் கஞ்சா கடத்தி வந்த கொலை குற்றவாளி உட்பட 4 பேர் கைது 15 கிலோ கஞ்சா, 2 கத்திகள் பறிமுதல் வெளி மாநிலங்களில் இருந்து குடியாத்தத்திற்கு appeared first on Dinakaran.